செய்திகள்

கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்து: சிறந்த அலங்கார ஊர்திக்கு விருது

சென்னை, ஜன.27-–

குடியரசு தினவிழாவையொட்டி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்திக்கு கவர்னர் விருது வழங்கி கவுரவித்தார்.

குடியரசு தினவிழாவையொட்டி சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் மனைவி லட்சுமி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பாலகங்கா, பாரதீய ஜனதா சார்பில் மகளிர் பிரிவு தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அலி மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், தியாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை கவர்னர் உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர்.

பின்னர் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள், தனிநபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலையை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

சமூக சேவை (நிறுவனங்கள்) பிரிவில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அமைப்பு நிறுவனத்துக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு (நிறுவனங்கள்) பிரிவில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பசுமை அமைதி காவலன் என்ற நிறுவனத்துக்கும் ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதேபோன்று சமூக சேவை தனிநபர் பிரிவில் மதன்மோகன் (திருவண்ணா மலை), குபேந்திரன் (சென்னை), ரஞ்சித்குமார் (தேனி) ஆகியோருக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தனிநபர் பிரிவில் தாமோதரன் (தர்மபுரி), முத்துகிருஷ்ணன் (நெல்லை), தலைமலை (ராஜபாளையம்) ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்திகளில் தீயணைப்புத்துறை முதலிடத்தையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 2-வது இடத்தையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை 3-வது இடத்தையும் பிடித்தது.

இதற்கான விருதை உள்துறை செயலாளர் அமுதா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சிறந்த முறையில் கலை நிகழ்ச்சியை நடத்திய ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, சோகா இகேதா கல்லூரிக்கும், ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளிக்கும், 2022-–2023-ம் நிதி ஆண்டில் கொடிநாள் வசூலில் சாதனை படைத்த மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, திருச்சி, கடலூர், செங்கல்பட்டு, பெரம்பலூர் மாவட்டங்களுக்கும், கோவை, ஈரோடு மாநகராட்சிக்கும் கவர்னர் விருது வழங்கி கவுரவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *