செய்திகள்

ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுப்பது எப்படி? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை, ஜூன் 29–

சட்டமன்றப் பேரவையில் நேற்று (28–ந் தேதி) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி விவசாயப் பெருமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் எடுத்து செல்லும் முறையை எளிமையாக்குதல் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டமன்றப் பேரவையில் நேற்று (28–ந் தேதி) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி விவசாயப் பெருமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் எடுத்து செல்லும் முறையை எளிமையாக்குதல் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாயப் பெருமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்துச் செல்ல ஏற்கெனவே ஜூன் 12 அன்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கு அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், வட்டாட்சியருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைந்து திறம்பட செய்திட இயற்கை வளங்கள் துறையால் கடந்த 25.-6.-2024 அன்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு, இதற்கென பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

இன்று வரை நீர்வளத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 5,103 ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்; ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 6,757 ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் பற்றிய விவரங்கள் மாவட்ட அரசிதழ்களில் வெளியிடப்பட்டு, தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே விவசாயிகள் தாங்கள் வசிக்கும் கிராமங்களில் அல்லது அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்றி, தற்போது விவசாயிகள் தாங்கள் வசிக்கும் தாலுகாவில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விவசாயிகள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இ–-சேவை மையத்தில் விண்ணப்பித்து, எவ்விதக் கட்டணமுமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மண் எடுக்கும் உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் பயனாக, ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்படுவதால், மழைக்காலங்களில் பெறப்படும் நீர் கூடுதலாக சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அப்பகுதிவாழ் பொதுமக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள்.

எனவே, விவசாயப் பெருமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் வரும் ஜூலை 3–ந் தேதி முதல் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *