செய்திகள் வாழ்வியல்

எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான பிஎல்டிசி மோட்டார் உருவாக்கி காரக்பூர் ஐஐடி ஆய்வாளர்கள் சாதனை


அறிவியல் அறிவோம்


ஐஐடி காரக்பூரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய சிறு எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான பிஎல்டிசி மோட்டார் , வாகன கட்டுப்படுத்தியை உருவாக்கியுள்ளனர்.

உலக அளவில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக்காரணங்களில் வாகனங்கள் வெளியேற்றும் புகையும் முக்கியமானது. காற்று மாசைக் குறைக்க சந்தைகளில் எலக்ட்ரானிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

பேட்டரியில் இயங்கக்கூடிய இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனால், ஆட்டோ போன்ற மூன்று சக்கர பயணிகள் வாகனங்கள் இன்னும் பெட்ரோ, டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றிலேயே ஓடிக்கொண்டிருக்கின்றன.

தற்போது சந்தையில் விற்கப்படும் எலக்ட்ரானிக் மூன்றுச்சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது காரக்பூர் ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் கருவியுடன் கூடிய பிஎல்டிசி மோட்டாரை உருவாக்கியுள்ளனர்.

மத்திய மின்னனு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூன்றுச்சக்கர வாகனங்களுக்கான மோட்டார் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. வாகன கட்டுப்படுத்தும் அமைப்புகள் பெரும்பாலான மின் மோட்டார் வாகனங்களில் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் வாகன கட்டுப்படுத்தியும் மோட்டாரும் தனித்தனியாக இருப்பதால் அதன் விலையும் அதிகமாக இருந்த நிலையில், இந்த இரண்டு அமைப்புகளையும் ஒன்றினைத்து ஒரே அமைப்பாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். 1.5 வாட் மின்சாரம் மூலம் இயங்கும் இந்த மோட்டார் வாகனத்தின் மூலம் 4 பயணிகளை அழைத்துச் செல்லமுடியும். இந்த மோட்டாரின் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஓட்டுநரின் இருக்கையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ரிவர்ஸ் எடுக்கும் வகையிலும் வசதிகளை மேம்படுத்தி அமைத்துள்ளனர். அதில் இருக்கும் ஒரு ஸ்விட்ச்சை ஆன் செய்து வாகனத்தை ரிவர்ஸ் எடுக்க முடியும். இந்த அமைப்புகள் அனைத்தையும் இந்திய சாலைகள் மற்றும் சீதோஷண நிலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர்.

தற்போது ஆண்டுக்கு பத்துலட்சம் எலக்ட்ரிக் மூன்றுச்சக்கர வாகனங்கள் தேவைப்படும் நிலையில் இந்திய கண்டுபிடிப்பை பயன்படுத்துவதன் மூலம் வெளிநாட்டில் இருந்து இந்த மோட்டார்களை இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஐசிஏடி-யின் ஐபி67 மற்றும் ஏஐஎஸ்041 சோதனைகளில் இந்த அமைப்பு தேர்ச்சியடைந்துள்ளது.

பேராசிரியர்கள் செங்குப்தா, தீப்னாத் மற்றும் வஞ்சனி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மோட்டாருக்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *