செய்திகள் நாடும் நடப்பும்

உணவு பாதுகாப்பை தந்த ஜாம்பவான் எம்.எஸ்.சுவாமிநாதன்


ஆர்.முத்துக்குமார்


நாடே பெருமைப்பட்டுக் கொண்டாடிய வேளாண் விஞ்ஞானி– இந்திய ஐந்தாண்டு திட்ட பசுமைப் புரட்சிச் சாதனையாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் தனது பழுத்த 98–வது வயதில் வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டார்.

உலகமே இவரை ‘பசுமைப்புரட்சியின் தந்தை’ என்று இவரது சாதனைகளையும் சேவைகளையும் பாராட்டி கொண்டாடுகிறது. நம் நாட்டில் மட்டுமின்றி சர்வதேச விவசாய அமைப்புகளில் தலைமைப் பொறுப்பை ஏற்று அதை நிர்வகித்து திறம்பட செயல்பட வைத்த பெருமை இவருக்கு உண்டு.

வேளாண் துறை சாதனைகளுக்காக 38 உலகளாவிய பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தும் உள்ளது.

1960களில் பசிப்பட்டினி சாவு நம்நாட்டில் அதிகரிக்கும் வேகத்தை கண்ட பல மக்கள்தொகை துறை வல்லுனர்கள் இந்தியாவின் வீழ்ச்சி துவங்கி விட்டதாக உறுதியுடன் கூறத் துவங்கினர்.

அவர்களது அச்சத்தின் பின்னணியில் அதிகரித்து வந்த இந்திய ஜனத்தொகையும் படுவேகமாக அதிகரித்து வந்தது. பயிர் சேதங்களும் அதிகரித்து வந்தது!

மழை, புயல், தண்ணீர் பஞ்சம் என ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் தொடர வேளாண் துறை செய்வது அறியாது தவித்துக் கொண்டிருந்தது.

பசி, பட்டினியின் கோரப்பிடியில் சிக்கி மரணித்த பல அப்பாவிகளின் குடும்பங்களில் ஏழ்மை பூதாகரமாக தாண்டவமாட கொரோனா ஏற்படுத்திய முழு ஊரடங்கயைும் மிஞ்சும் பொருளாதார சிக்கலுக்கு வித்திட்டது.

1961ல் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமான ICAR அமைப்பின் இயக்குனராக பதவியில் அமர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கோதுமையின் குட்டை ரகத்தை அறிமுகப்படுத்தினார்.

அன்று அவர் துவக்கிய விவசாய புரட்சியை உலக வரலாறு பசுமை புரட்சி என்று பாராட்டுகிறது.

அவரது முயற்சிகளால் குறைந்த நீர்வரத்து பகுதிகளில் அரிசி, கோதுமை, சிறு தானிய விளைச்சல் தொடர முடிந்தது. அதுபோன்றே அதிகமாக நீர் தேங்கியிருக்கும் விளைநிலங்களிலும் அறுவடை சிறப்பாகவே பெற முடிந்தது.

1965 கால கட்டத்தில் சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் உணவு தானியங்களை அனுப்பி உதவியதை அப்போதைய இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இருந்தது.

ஆனால் எம்.எஸ்.சுவாமிநாதன் ஏற்படுத்திய பசுமைப் புரட்சியால் நாடே இழந்து வந்த விவசாய பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை காண வைத்து பல நாடுகளுக்கு கைவசம் இருக்கும் அதிகப்படி மகசூலை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறிவிட்டோம்.

இந்தப் புரட்சியைச் செய்த மேதை எம்.எஸ்.சுவாமிநாதன் சென்ற வாரம் செப்டம்பர் 28 அன்று நம்மை விட்டு மறைந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை அனைவரின் அன்பையும் பெற்ற அவர் அரசியலுக்கு வெகுதொலைவில் நின்று நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவர் ஆவார்.

விவசாயிகள் எப்படி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி, விளைச்சலை அதிகரித்துக் கொள்ள ஆலோசனைகள் தருவதுமுதல் இந்திய விவசாயிகளின் ஒவ்வொருவர் வாழ்விலும் வளம் பெறுவது வரையிலான பசுமைப் புரட்சியினை ஏற்படுத்திட தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் ஆவார்.

மத்திய அரசின் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத் தலைவர், உணவு பாதுகாப்புக்கான சர்வதேச குழுவின் உயர்நிலை நிபுணர் குழு தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குனர் என பல முக்கிய பதவிகள், பொறுப்புகளை வகித்தவர். பத்ம விபூஷண், ராமன் மகசேசே விருது உட்பட பல உயரிய விருதுகளை பெற்றவர்.

ஆகஸ்ட் 7, 1925–ல் கும்பகோணத்தில் பிறந்தவர், பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு இவர் மருத்துவராவதற்கு ஏற்ற படிப்புக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார்.

சுவாமிநாதனின் தந்தை கே.சாம்பசிவன் டாக்டர். அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். நாடு சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில் வங்கப்புயல் பாதிப்பாலும் அதை தொடர்ந்து ஏற்பட்ட உணவு பஞ்சம் போன்றவற்றாலும் பல கொடூரப் பஞபுசக் காட்சிகளினால் பாதிக்கப்பட்டு இதற்கு தீர்வு காணும் படிப்பே மக்களை காப்பாற்றும் என்று முடிவு செய்து வேளாண் துறை படிப்பில் கவனம் செலுத்தி அதில் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படிப்பை முடித்தார்.

அமெரிக்காவில் அப்போதே விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும் அதை ஏற்காமல் 1954 ல் நாடு திரும்பி மத்திய அரசின் பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1988 வரை பணிபுரிந்தார். வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் 1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி செயல்திட்டங்களை முன்னின்று நடத்தினார்.

புதிய ரக கோதுமைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி கோதுமை உற்பத்தியைப் பெருக்கி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டைப் பெற்றார். அரிசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தி, நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்தார்.1989-ல் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கிய அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன். (கோப்பு படம்)

இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணைக் கருவிகள், நீர்ப்பாசன முறைகள், களைக்கொல்லி மருந்துகள், உரங்கள் என விவசாயத்தில் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி விவசாயத்தை நவீன தொழில் துறை அமைப்பாக மாற்றினார்.

இதனால் வேளாண் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின. வேளாண் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துவந்த நிலை மாறி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையை உருவாக்கினார்.

1988-ல் சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார்.இந்த நிறுவனம் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காகவும் வேளாண் ஆராய்ச்சிக்காகவும் தொடர்ந்து பல்வேறு வழிகளில் பாடுபட்டு வருகிறது. இதன் நிறுவனராகவும், தலைமை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷன் விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு மற்றும் வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வால்வோ விருது, ஆசியாவின் உயர்ந்த பரிசு என்று கருதப்படும் ராமன் மகசேச விருது, எம்.எஸ்.பட்நாகர் விருது உள்ளிட்ட 41 தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். உலக அளவில் 38 பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன.

ஆங்கிலேயர்கள் 19–ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டீ, காபி மற்றும் பிற பயிர்கள் அதிக விளைச்சல் தர ரசாயன உரங்களை உபயோகிக்க ஆரம்பித்தனர்.

1980 களில் எம்.எஸ்.சுவாமிநாதன் அதன் பாதகங்களை உணர்ந்து இயந்திரமயத்தின் உதவியை நம்புங்கள், பாதகமான நச்சாக இருக்கும் ரசாயன உரங்கள் வேண்டாம் என அறிவுறுத்தத் துவங்கினார்.

1940 ல் நமது ஜனத்தொகை 30 கோடி, இன்றோ 140 கோடி பேராக உயர்ந்து விட்டோம். நம்மிடம் இருக்கும் விளைச்சல் நிலங்கள் குறைந்து வரும் வேகம், நகரியம் காரணங்களால் என்பதை அறிவோம். ஆனால் இன்றோ உணவு பாதுகாப்பில் முன்நிற்கின்றோம்.

இந்த சாதனையின் சக்தியாக இருப்பது இந்த ஒரு தனி மனிதன் என்பதை பார்க்கும்போது அவரது சேவையை மனம் திறந்து பாராட்டாமல் இருக்கவே முடியாது.

2025ல் நாம் பஞ்சத்தை களை எடுத்து விடுவோம் என்று கடந்த 15 ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வந்த அவரின் சுறுசுறுப்பு பார்ப்பவரை வியக்க வைக்கும்.

80 வயதில் முதுமையை அண்டவிடாமல் இளமை வேகத்துடன் செயல்பட்டு வந்தார்.

எந்த நிலையிலும் தன்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தரக்கூடாது என உறுதியாக கூறிவிட்டதால் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான் வீட்டிலேயே தீவிர சிகிச்சைகள் தரப்பட்டு இருக்கிறது.

நாட்டின் உணவு பாதுகாப்பு சவாலையும் தன் 97 வயது முதுமையின் சவால்களையும் சமாளித்து அவர் வாழ்ந்த வாழ்க்கை நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

அவரது பிறப்பால் வாடிய பயிர்கள் உயிர் பெற்றன. அவரது பிரிவால் மானுடமே சோகத்தில் தலைகுனிந்து வாடுகிறது!

அவருக்கு நாட்டின் தலைவர்களும் கல்வியாளர்களும் விவசாயிகளும் வீரவணக்கம் செலுத்தி வழி அனுப்புகையில் மக்கள்குரல், டிரினிட்டி மிரர் பத்திரிக்கை குடும்பமும் அந்த மாமனிதனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கண்ணீர் பூக்களால் அவர் பாதங்களில் காணிக்கையாக வைத்து வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்துகிறது.

வாழ்க எம்.எஸ்.சுவாமிநாதன் புகழ்; வெல்க அவரது பசுமைப் புரட்சிச் சேவைகள்; சாதனைகள்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *