செய்திகள்

ஆமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட முதல் விமானம்: கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

லக்னோ, ஜன. 11–

அயோத்திக்கு புறப்பட்ட முதல் விமானத்தில், பயணிகள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா மற்றும் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாரதீய ஜனதா ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பாரதீய ஜனதாவைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவிலை சிறப்பிக்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கிலும் அயோத்தியில் புதிதாக விமான நிலையத்தை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்….

இந்த நிலையில் அயோத்திக்கான முதல் விமானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் சென்ற பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து அயோத்திக்கு செல்லும் முதல் விமானம் என்பதால் ஊழியர்களுடன் பயணிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

3 வார விமானங்கள்

இதனிடையே அயோத்தியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் வி.கே.சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆமதாபாத் மற்றும் அயோத்தி இடையேயான முதல் 3 வார விமானங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “டிசம்பர் 30ம் தேதி அயோத்தி மற்றும் டெல்லி இடையே இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் இயக்கப்படும் முதல் விமானத்தை நாங்கள் தொடங்கி வைத்தோம். இன்று அயோத்தியை ஆகமதாபாத்துடன் இணைத்துள்ளோம்.2014ல் உத்தரப் பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அயோத்தி விமான நிலையம் உட்பட 10 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள் உத்தரப் பிரதேசத்தில் மேலும் 5 விமான நிலையங்கள். அசம்கரில் ஒரு விமான நிலையம் அமைக்கப்படும். அலிகார், மொராதாபாத், ஷ்ரவஸ்தி மற்றும் சித்ரகூட்டில் அடுத்த மாதம் திறக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெவாரில் சர்வதேச அளவிலான விமான நிலையம் தயாராகிவிடும் என்றார்.

இதனிடையே உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, ஆமதாபாத் மற்றும் அயோத்தி இடையேயான முதல் 3 வார விமானங்களுக்கான போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *