செய்திகள்

56 ராஜ்யசபை எம்.பி. பதவிகளுக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல்: 8-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்

புதுடெல்லி, ஜன.30-

ஜே.பி.நட்டா, மன்மோகன் சிங் உள்பட 56 பேரின் ராஜ்யசபை எம்.பி. பதவி காலம் முடிவடைகிறது. இதனால் காலியாகும் 56 இடங்களுக்கு வருகிற பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் 8-ந் தேதி தொடங்குகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் ராஜ்யசபையில் 12 நியமன உறுப்பினர் களுடன் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.இதில் 233 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

இவ்வாறு தேர்ந்து எடுக்கப்படும் ராஜ்யசபை எம்.பி.க்களின் பதவி காலம் 6 ஆண்டுகள். மொத்தம் உள்ள உறுப்பினர்களில் 3-ல் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் தற்போது ராஜ்யசபை உறுப்பினராக உள்ள 56 பேரின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது.

இதில் பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட 9 மத்திய அமைச்சர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

15 மாநிலங்களில் காலியாகும் இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தவற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. அதன்படி, 56 மேல் சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 8-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறும். 16-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறும் கடைசி நாள் 20-ந் தேதி. பிப்ரவரி 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். முடிவுகள் அன்று மாலையே தெரிவிக்கப்பட்டு விடும்.

மேற்கண்டவாறு இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *