சிறுகதை

லாக்கர்ஸ் – ராஜா செல்லமுத்து

ஒரு அரசாங்க வங்கியின் கடைநிலை ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தான் பாபு. அறைகளைப் பெருக்குவது. சுத்தம் செய்வது உயர் அதிகாரிகள் இடத்தில் தண்ணீர் வைப்பது என்று அவனுக்கு இடப்பட்ட வேலைகள்.

பாபு கால் வைக்காத இடங்கள் அந்த வங்கியில் இல்லை என்ற அளவிற்கு அவன் அந்த வங்கியில் பம்பரமாக சுற்றித்திரிந்தான்.

வங்கிக்குள் எங்கு சென்றாலும் சுதந்திரமாகச் செல்லலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது அவன் நடத்தை, அவனுடைய பேச்சு, அவனுடைய செய்கை எல்லாம் பிடித்துப் போனதால் தற்காலிக ஊழியராக இருந்த அவனை நிரந்தர ஊழியராக சிபாரிசு செய்தார் வங்கி மேலாளர்.

அதிலிருந்து அந்த அரசாங்க வங்கியில் ஒரு செல்லப் பிள்ளையாக இருந்து வந்தான் பாபு.

காலையில் வங்கிக்கு வந்து வங்கியை முழுவதையும் கூட்டிச் சுத்தம் செய்து மேசைகளைத் துடைத்து அலுவலர்கள் வந்ததும் அவரவர் இருக்கையில் அமர்ந்த பிறகு அத்தனை பேருக்கும் டீ, காபி வாங்கி கொடுப்பதென்று பணிவான வேலைகளைச் செய்வான் பாபு .

ஆனால் அவனுக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தது. லாக்கர்ஸ் பக்கம் மட்டும் அவன் இதுவரை போனதே இல்லை. அதை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். பாதுகாக்கப்பட்ட இடம், பணம், பொருள், நகை டாக்குமெண்ட்கள் என்று விலை உயர்ந்த பொருட்கள் அங்கு இருப்பதால் வங்கி மேலாளர், லாக்கர்ஸ் பயன்படுத்துபவர்கள் மட்டும்தான் உள்ளே செல்ல முடியும்.

வாரத்துக்கு ஒரு முறை ஒரு பெண் ஊழியர் மட்டும் லாக்கர்ஸை சுத்தம் செய்து வர அனுமதி அளித்திருந்தார் மேலாளர்.

லாக்கர்ஸ் பக்கம் மட்டும் பாபு செல்ல முடியாமல் இருந்தது.எப்படியாவது அங்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான் பாபு.

ஒரு நாள் தன் ஆசையை மேலாளிடம் சொன்னான்.

சரி பாபு அதுக்கு என்ன? போய் பாத்துருங்க? என்று மேலாளர் சொல்ல, அந்த லாக்கர்ஸ் இருக்கும் அறைக்குச் சென்றான் பாபு.

ஒவ்வொரு லாக்கரும் பூட்டுப் போடப்பட்டிருந்தது. உடன் மேலாளரும் வந்திருந்ததால் அவனுக்கு ஆசை மேலிட்டது

சார் இதுக்குள்ள எல்லாம் என்ன இருக்கும்? என்று பாபு கேட்க

வீட்டில வைக்க முடியாத விலை உயர்ந்த தங்கம், டாக்குமெண்ட் பொருள்களை இங்கே வச்சிட்டு போவாங்க .அது இங்க பத்திரமா இருக்கும் .அதுக்கு நாம ஒரு சார்ஜ் பண்றோம்.இங்க பாதுகாப்பா இருக்குங்கறதனால அவங்க தங்களுடைய விலை உயர்ந்த விஷயங்களை இங்க வைக்கிறாங்க என்று சொன்னார் மேலாளர்.

எல்லா லாக்கரையும் சுற்றிப் பார்த்த பாபுவுக்குத் தலை சுற்றுகிறது .

சார் இவ்வளவு நகைகள் பொருட்களை பாதுகாத்து வச்சா என்ன பண்ணப் போறாங்க?

என்று பாபு கேட்க

அவன் சொன்னதைக் கேட்டு கடகடவென்று சிரித்தார் வங்கி மேலாளர் .

என்னப்பா இப்படி சொல்ற? இதுதான் எதிர்காலம். இதுதான் அவங்க சொத்து என்று அவர் சொன்னதை கேட்ட பாபு

சார் ஒரு இருபது நாளைக்கு முன்னாடி ஒருத்தர் தவறிட்டதாக ஒரு அம்மா வந்தாங்களே அவங்களுடைய லாக்கர்ஸ் கூட இங்க இருக்குன்னு சொன்னாங்களே ? உண்மையா சார் என்றான் பாபு.

சற்று நேரம் யோசித்த மேலாளர்

ஆமா நீ சொல்றது கரெக்ட் தான் பாபு .அவங்களாேட லாக்கர் நம்பர் 120. இது தான்அவங்களோட லாக்கர் என்று காட்டினார் மேலாளர்

இதில் என்ன இருக்கு சார்? என்று பாபு கேட்க

இதுல தங்க நகை, வீட்டுப் பத்திரம் பணம் எல்லாம் வச்சிருக்காங்க பெரிய பணக்காரங்க என்று கொஞ்சம் வியப்பாக சொன்னார் வங்கி மேலாளர்

அவர் சொன்னதை கேட்டு கடகடவென சிரித்த பாபு

எஸ் சார் பணம், பொருள் நகையெல்லாம் பூட்டி வைக்க தெரிஞ்ச மனுஷங்களுக்கு நம்ம உசுர பூட்டி வைக்கிற பெட்டகம் எதுவும் இல்லயே சார் .அப்படி ஏதாவது இருந்தா நம்ம எல்லாம் நம்பு உசுர கொண்டு போயி,இப்படி நகைப் பொருள்கள லாக்கர்ல பாதுகாத்து வைக்கிறது மாதிரி வச்சுக்கலாம்ல்ல

என்று பாபு சொன்னதும், அவனை ஒரு மாதிரியாகப் பார்த்த மேலாளர்

சரி பாபு வெளியே போகலாமா? என்று கொஞ்சம் கோபமாக பாபுவை வெளியே தள்ளி லாக்கரைப் பூட்டினார்

இனிமே நீ இந்த லாக்கர் இருக்கிற பக்கமே வரக்கூடாது. பாே என்று பாபுவைத் துரத்தினார் வங்கி மேலாளர்:

என்னது நாம உண்மையச் சொன்னாேம்? நம்மள ஏன் இப்படி துரத்துறாரு? என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்தான் பாபு.

லாக்கர கொண்டு போயி காமிச்சா பெரிய தத்துவம் சொல்லிக்கிட்டு இருக்காரு துரை என்று நொந்தபடியே அவருடைய அறைக்குள் நுழைந்தார் வங்கி மேலாளர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *