செய்திகள்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்: வாக்களித்த பின் கெலாட் பேட்டி

ஜெய்ப்பூர், நவ. 25–

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஓட்டளித்த பிறகு முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக்காலம் முடிவடைவதை அடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில், கரண்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் சிங் கூனார் உயிரிழந்ததை அடுத்து, 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், அதை தட்டிப் பறிக்கும் முயற்சியில் பாரதீய ஜனதாவும் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றன. மொத்தமுள்ள தொகுதிகளில், 34 தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்கும், 25 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் 183 பெண்கள் உட்பட 1,862 பேர் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் 5.25 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர். இதில், 22 லட்சத்துக்கும் அதிகமானோர் முதன்முறையாக தங்கள் ஓட்டுகளை பதிவு செய்கின்றனர். நகர்ப்புறங்களில் 10,501 ஓட்டுச் சாவடிகளும், கிராமப்புறங்களில் 41,006 ஓட்டுச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. பதற்றமானதாக அறியப்பட்ட 26,393 ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் ஓட்டுப்பதிவு, இணையதளம் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, கட்டுப்பாடு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் 65,277 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 67,580 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்தல் நியாயமாகவும், பாதுகாப்பாகவும் நடப்பதற்கு ஏதுவாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான உள்ளூர் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் 1.70 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 61,021 பேர் ஏற்கெனவே வீட்டில் இருந்தபடி வாக்களித்து விட்டனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க, மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று விறுவிறுப்புடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், பாஜக மாநில தலைவர் சி.பி. ஜோஷி உள்ளிட்டோர் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் உள்ள வாக்கு சாவடியில் ஓட்டளித்தார். பின்னர் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். ஒவ்வொரு சமூக மக்களும் எங்களுடன் இருப்பதால் காங்கிரஸ் பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.மக்கள் நமது ஆட்சி, திட்டங்கள், உத்தரவாதங்கள் ஆகியவற்றின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க முன்வர வேண்டும். மிகப் பெரிய சதவீதத்தில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

காலை 9.30 மணி நிலவரப்படி 9.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 11.30 மணி நிலவரப்படி 24.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் அடுத்த மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *