செய்திகள்

முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசு பள்ளிகளை காப்போம்

‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை, ஜன.10-

‘முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசு பள்ளிகளை காப்போம்’ என்று விழுதுகள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துரையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாசித்தார்.

முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலாளர் ஜெ.குமரகுருபரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துரையை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்வதற்கு, மிக முக்கிய காரணம் கல்விதான். அத்தகைய கல்வியை அனைவருக்குமானதாக மாற்றிய பெருமை, நம் அரசு பள்ளிகளையே சாரும். தொடக்கக் காலகட்டம் முதல், இன்றைய நாள் வரை, அரசு பள்ளிகளே அனைவருக்குமான கல்வியை கொடுத்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சிறப்புக்குரிய அரசு பள்ளிகளில் படித்து, இன்றைக்கு வாழ்க்கையிலும், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி, பல உயரங்களை எட்டியிருக்கிற, உங்கள் எல்லோரையும் மனதார வாழ்த்துகிறேன். நாம் படித்த பள்ளிக்காக, நாம் எல்லோரும் திரும்ப, ஓரிடத்தில் ஒன்று கூடியிருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான தருணம். இப்போது முதல், நாம் படித்த அந்த அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஊக்கமாகவும், அந்தந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு உறுதுணையாகவும் இருப்பதோடு, அந்த பள்ளிக்கும், ஊருக்கும் இணைப்பு பாலமாகவும் நாம் இருக்க வேண்டும்.

‘நம் பள்ளி, நம் பெருமை’ என்கிற முழக்கத்திற்கு முன்னாள் மாணவர்களாகிய நீங்கள்தான் சொந்தக்காரர்கள். நீங்கள்தான் ‘விழுதுகள்’. விழுதுகளாகிய நீங்கள் எல்லாம், ஒன்று சேர்ந்து ‘நம் பள்ளி, நம் பெருமை’ என்ற கூற்றை நிலைநிறுத்த வேண்டும். அதற்கு நாம் அனைவரும் பள்ளி மேலாண்மைக்குழுவோடு இணைந்து நம் பள்ளியின் மேம்பாட்டிற்காகச் செயலாற்றவேண்டும்.விழுதுகளாகிய ஒவ்வொருவரும் நம்முடைய அரசு பள்ளிகளை பேணிக் காப்பதையும், அவற்றை மேம்படுத்துவதையும் நமக்கான பொறுப்பாக எடுப்போம், அடுத்த தலைமுறையினருக்கான நம்பிக்கையாகவும் வழிகாட்டியாகவும் இருப்போம்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

நம்முடைய 2-வது பெற்றோர், வீடு எவை என்றால், அது நாம் படித்த பள்ளிக்கூடம் தான். சிறுவயதில் பெற்றோர் எல்லாவற்றையும் எப்படி செய்து கொடுத்தார்களோ, அதேபோல் பள்ளிக்கூடமும் தேவையான கல்வி, அறிவு எல்லாவற்றையும் கொடுத்து ஆளாக்கியது. நிறைய இடங்களில் முன்னாள் மாணவர்கள் இணைந்து, பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்து இருக்கிறார்கள் என்ற செய்தியை பார்க்கிறோம். அந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை செய்கிறது. பள்ளிகள் நம்மை எப்படி கைவிடவில்லையோ? அதேபோல நாமும் கைவிட்டு விடக்கூடாது. அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஓரணியில் இணைந்து வாருங்கள். விழுதுகள் மூலம் பள்ளிகளை வலிமையாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதி கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இனிவரும் காலங்களில் சமூகநீதி பாடல் அரசு பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என தெரிவித்து கொள்கிறோம். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *