செய்திகள்

மாநில உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் 3 நாட்கள் தி.மு.க. பொதுக்கூட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப்.15-–

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் களத்தில், ஜனநாயக உரிமைகளை காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் முதல்படியாக நாளை முதல் 18-ந் தேதி வரை உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு–-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க.வின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது.

சென்னையைச் சார்ந்த 3 நாடாளுமன்ற தொகுதிகள் நீங்கலாக, மற்ற தொகுதிகளில் நடைபெற உள்ள உரிமை முழக்க கூட்டம் உங்களில் ஒருவனான என் பெயரில் அமைந்திருந்தாலும், ஒலிக்கப்போவது உடன்பிறப்புகளான உங்களின் குரல்தான்.

2024 நாடாளுமன்ற தேர்தல் களம் என்பது இந்தியாவில் இனி தேர்தல் முறை என ஒன்று இருக்குமா?, மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா?, ஜனநாயகம் நீடிக்குமா?, அரசியல் சட்டம் நிலைக்குமா, பன்முகத்தன்மையும், மாநில உரிமைகளும் உயிர்த்திருக்கு மா? என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும்

ஏற்கனவே விவசாயிகளின் உரிமை போராட்டத்தை ஒடுக்க முடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஆனால், விவசாயிகளின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெறவில்லை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளை பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது.

பா.ஜ.க. வாக்குறுதி

காற்றில் பறந்தது

தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அளவிலும் பா.ஜனதா செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அ.தி.மு.க. மக்களின் எதிரிகளான இந்த 2 கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. பத்தாண்டுகால பாரதீய ஜனதா ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்துபோனதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் காற்று போன பலூன்களானதையும் எடுத்துரைக்கத்தான் தி.மு.க.வின் உரிமை மீட்கும் முழக்கம் ஒலிக்கவிருக்கிறது.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட மாநகர பகுதி, ஒன்றிய, நகர,- பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், பி.எல்.ஏ-2, பி.எல்.சி. ஒருங்கிணைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் வகையில் இந்த பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும். பெண் நிர்வாகிகள் பங்கேற்கக்கூடிய வகையில் போதுமான இட வசதிகளும், உரிய பாதுகாப்பும் அமைத்து தரப்பட வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் அவரவர் தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டியினர் கலந்து கொள்வதை உறுதிசெய்து, கண்காணித்திட வேண்டும். மாவட்ட செயலாளர்களும், பொறுப்பு அமைச்சர்களும் அவரவர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து, சரியான முறையில் திட்டமிட்டு, கட்சியினருடன் பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்த பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.

மேடை அமைப்பு, விளம்பரங்கள், ஒலி-ஒளி அமைப்பு, இருக்கை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து கட்சி தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதை மனதிற்கொண்டு, கட்டுக்கோப்பான முறையில் கூட்டத்தை நடத்தி, மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, அவர்களின் பேராதரவுடன் வெற்றியை அறுவடை செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து கட்சியினருக்கு பயிற்சி தரும் வகையிலும், பொதுமக்களுக்கு பாரதீய ஜனதா – அண்ணா தி.மு.க. மறைமுக கூட்டாளிகளின் நேரடி துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் அமைந்திட வேண்டும்.

அதுதான், பாசிசத்தை வீழ்த்தி, இந்தியா வென்றிடுவதற்கான களத்தை அமைத்து தரும். இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும்.

இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *