செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.யாக இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி நியமனம்

பிரதமர் மோடி வாழ்த்து

பெங்களூரு, மார்ச்.9-–

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி, மாநிலங்களவை எம்.பி. யாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இன்போசிஸ் என்ற மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி பெங்களூருவை சேர்ந்தவர். அவருடைய மனைவி சுதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் அறக்கட்டளை தலைவராக உள்ளார். இந்த தம்பதியின் மகள் அக்‌ஷதா மூர்த்தி. இவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

73 வயதான சுதா மூர்த்தி, இன்போசிஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை ஆற்றி வருகிறார். பெங்களூருவில் நிமான்ஸ், ஜெயதேவா, விக்டோரியா உள்ளிட்ட பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளார். இது தவிர கர்நாடகத்தில் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அந்த அறக்கட்டளை மூலம் நேரடியாக வீடுகளை கட்டி கொடுப்பது, நலத்திட்ட உதவிகள் போன்ற பணிகளையும் செய்து வருகிறார். சுதா மூர்த்தி எழுத்தாளராகவும் உள்ளார். அவர் கன்னடம், ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகளை சுதா மூர்த்தி வைத்திருக்கிறார். அதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.5,600 கோடியாகும். கடந்த 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற அவருக்கு, இந்த ஆண்டு ஜனவரியில் பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்.பி.யாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-– சுதா மூர்த்தியை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார். அவர் சமூக சேவை, கல்வித்துறையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மாநிலங்களவையில் அவர் இருப்பது பெண் சமூகத்திற்கு பலம் வாய்ந்ததாக இருக்கும். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் பலம், அவர்களின் வளத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுதா மூர்த்தி, ‘நான் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்ட தகவல், இதுதொடர்பான அறிவிப்பு வெளியான ஒரு நிமிடத்திற்கு முன்பு தான் எனக்கு தெரியவந்தது. நான் தற்போது வெளிநாட்டில் உள்ளேன். அரசியலில் சேவையாற்றக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் மோடி இதுபற்றி அறிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. எனது குடும்பத்தினருக்கு கூட இதுபற்றி தெரியாது. நான் என்னால் முடிந்த வரை சேவையாற்றுவேன். இந்த பதவி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *