செய்திகள்

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் ஸ்டாலின் 2–வது நாளாக ஆய்வு

தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

சென்னை, டிச. 6–

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே சென்னையில் கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கினார். கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டதோடு, யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். எழிலகம் எதிரே கடல் முகத்துவார பகுதிகளையும் பார்வையிட்டார்.

தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டார். மழை நீரை வடிய வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்களிடம் அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது தரமணி 100 அடி சாலையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், பிரெட், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரீனா கடற்கரை சாலையில் உள்ள நேப்பியர் பாலம் பகுதிக்குச் சென்றார். அங்கு கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தில் திடக் கழிவுகள் அகற்றப்படுவதை பார்வையிட்டார். மெரீனா கடலில் கூவம் ஆற்று தண்ணீர் கலக்கும் பகுதிக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றின் முகத்துவாரத்தில் சீராக வடிகிறதா என்பதனை பார்வையிட்டார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உடனிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *