செய்திகள்

போராட்டம் நடத்த உரிமையுள்ளது, பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது: ஐகோர்ட்

அகவிலைப்படி வழங்குவது பற்றி அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஜன. 10–

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.இதற்கிடையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மூத்த வக்கீல் பட்டாபி ரகுராமன் ஆஜராகி முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

அதன்படி, இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாத அகவிலைப்படி கோரிக்கையை ஏற்காததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் வாதிடப்பட்டது. அதன்பின் பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்று பெறாத நிலையில் வருகிற 19-ம் தேதிக்கு பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொங்கல் பண்டிகையின்போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? போராட்டம் நடத்த உரிமையுள்ளது; பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்று கூறினர்.

பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

மேலும் அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருகின்றீர்கள்?; தீர்வு காண்பதில் என்ன பிரச்சினை உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வேலைநிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள்தான்; நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை இந்த மாத இறுதிக்கு ஒத்திவைப்பது குறித்து தொழிற்சங்கத்தினரும், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து அரசுத் தரப்பும் பதிலளிக்கக் கோரி பிற்பகல் 2.15 மணிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *