செய்திகள்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை, ஏப். 16–

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து நேரில் வந்து ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதனை தொடர்ந்து, நயினார் நாகேந்திரனின் பணம்தான் என முதற்கட்ட தகவல் வெளியானது. இதையடுத்து, நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், அவரின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி ஜெ.சத்திய நாராயணா பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்குப்பதிவு தவிர மற்ற அனைத்து தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த நிலையில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேசமயம் இந்த வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *