செய்திகள்

தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்களுக்கு நன்றி: திருநாவுக்கரசர் எம்.பி.

சென்னை, மார்ச் 31–

தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என திருநாவுக்கரசர் எம்.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

காங்கிரஸ் தொகுதியான திருச்சியும், ஆரணியும் இந்த முறை மாற்றப்பட்டது. இதில் ஆரணி எம்.பி.யான விஷ்ணு பிரசாத்துக்கு கடலூரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கு எங்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் திருநாவுக்கரசர் ஆதங்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த தேர்தலில் திருச்சியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித்தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.

288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அனைத்து பணிகளிலும் எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும், ஆட்படாமல், நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.

இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகச் செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *