செய்திகள்

தெலுங்கானா எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா கார் விபத்தில் மரணம்

ஐதராபாத், பிப்.23–

தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா இன்று காலை கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 36.கடந்த வருடம் தெலுங்கானா மாநில செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியில் பிஆர்எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், லாஸ்யா நந்திதாவின் தந்தையுமான சாயண்ணா மரணமடைந்ததையொட்டி, இவர் தேர்தலில் போட்டியிட பி.ஆர்.எஸ். கட்சி சீட் வழங்கியது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லாஸ்யா நந்திதா இளம் வயதில் எம்.எல்.ஏ. ஆனார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில், தனது உதவியாளர் அசோக்குடன் மெட்சல் பகுதியில் இருந்து சதாசிவ பேட்டா நோக்கி லாஸ்யா நந்திதா காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செகந்திராபாத் வெளி வட்ட சாலையில் கார் வேகமாக கொண்டிருந்தபோது, பட்டான் செருவு எனும் இடத்தில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஒரு லாரியை முந்திய போது கார் நிலை தடுமாறி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் 2 பல்டிகள் அடித்து சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உதவியாளரே காரை ஓட்டியதால் அவர் படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதவியாளர் அசோக்கை பட்டான் செருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து பட்டான் செருவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கார் சுமார் 130 முதல் 150 கி.மீ வேகத்தில் அலட்சியமாக ஓட்டியதும், கார் சீட் பெல்ட்டை எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா அணியாததும் அவர் மரணத்திற்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா மரணமடைந்த தகவல் அறிந்ததும், பிஆர் எஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதேபோன்று, தற்போதைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியு, தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தமது இரங்கல்களையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் உயிரிழந்த எம்.எல்.ஏ லாஸ்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.லாஸ்யா நந்திதா கடந்த 1987ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். இவர் கம்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்று, 2015ல் அரசியலில் பிரவேசித்தார். 2016ல் தனது தந்தையுடன் பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து, 2016 முதல் 2020 வரை காபாடிகூடா மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றினார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நல்கொண்டா மாவட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் செகந்திராபாத் திரும்பிய போது, இவரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் லாஸ்யா நந்திதா படுகாயத்துடன் உயிர் தப்பி அதிலிருந்து மீண்டார். ஆனால் இன்று காலை நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *