செய்திகள்

தெலங்கானாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் இன்று தொடக்கம்

ஐதராபாத், அக். 6–

தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி கற்பிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து அதனை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய, தெலங்கானா அரசு, அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தது.

23 லட்சம் மாணவர்கள் பயன்

அந்த ஆய்வின் அடிப்படையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி வைத்தனர். ரூ. 400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 28,000 அரசு பள்ளிகளில் பயிலும் 23 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மெனுவையும் பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. அதன்படி, திங்கள் கிழமை கோதுமை ரவா உப்மா மற்றும் சட்னியும், செவ்வாய் கிழமை அரிசி ரவா கிச்சடியுடன் சட்னியும் வழங்கப்படவுள்ளது. புதனன்று பம்பாய் ரவா உப்மா மற்றும் சட்னி, வியாழன் கிழமை ரவா பொங்கல் மற்றும் சாம்பார், வெள்ளிக்கிழமை தினை ரவா கிச்சடியுடன் சாம்பார், சனிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி மற்றும் சட்னி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள அரசு பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *