சிறுகதை

தரும சிந்தனை – ஆர்.வசந்தா

சிவராமனுக்கு தரும சிந்தனை என்பது பிறந்ததிலிருந்தே கிடையாது. சிறுவயதில் கூட ஒரு மிட்டாயைக் கூட தன் சகோதர சகோதரிக்கு கொடுக்கமாட்டான். அதற்காக அவனும் அடுத்தவரிடம் வாங்கவும் மாட்டான்.

சிறுவயதில் ஆரம்பித்த அந்த பழக்கம் பின்னாளிலும் கூடவே வந்தது. தன் பழைய புத்தகங்களைக் கூட விலைக்குத்தான் விற்பான். தன் பழைய சீருடைகளைக் கூட அம்மாவிடம் கூறி ஏதாவது பழைய சாமான்காரனுக்குத் தான் போட வேண்டும் என்று கண்டிப்பாக கூறினான்.

தரும சிந்தனை என்ற ஒரு உணர்வு இன்றியே சிவராமன் வளர்ந்து விட்டான். நல்ல வேலையிலும் சேர்ந்தான். அவன் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடமும் அப்படியே நடந்து கொண்டான். யாராவது கல்யாணப் பத்திரிக்கை கொடுத்தாலும் மிகவும் கஷ்டப்பட்டுதான் ஏதாவது பணம் கொடுப்பான். சில சமயங்களில் பணம் ஏதாவது வைக்காமலேயே மேல் கவரில் மட்டும் இவ்வளவு பணம் என்று எழுதிவிட்டு வெற்றுக் கவரை கொடுத்து விட்டு வந்து விடுவான். காலங்கள் உருண்டோடின.

திருமண வயதும் வந்து விட்டது. பெண்பார்க்கும் படலமும் நடந்தது. அம்மா, அப்பா ஒரு பெண்ணைத் தேர்வு செய்தனர். திருமணமும் நடந்தேறியது. விருந்தும் நடந்தது. இது எதற்கு இது வீண் செலவு என்று மணவறையிலேயே குற்றம் கண்டுபிடித்தான். பெண்வீட்டார் பயந்து விட்டனர். பையன் கையில் சேமித்து வைத்த பணம் ஆச்சர்யப்பட வைத்தது.

மனைவி முதலில் மிரண்டுதான் போனாள். அவனின் குணத்தைப் பார்த்து பிறகு, அவனின் குணம் அப்படி என்று அவளும் அவனுக்கேற்றார் போல் இணைந்து வாழப் பழகிக் கொண்டாள்.

மனைவி புவனாவுக்கு ஒரு தடவை தங்கள் குலதெய்வம் கோவிலுக்குப் போக வேண்டும் என்று அவனிடம் கேட்டாள். எதாவது சொல்லி தட்டிக் கழித்து வந்தான். புவனாவும் விடாமல் அவனைக் கேட்டுக் கடைசியில் இரண்டாவது குழந்தைக்கு முடியெடுக்க குல தெய்வம் கோவிலுக்கு கூட்டி போவதாக வாக்களித்தான். முதல் குழந்தையின் தலைமுடியும் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்திருந்தாள் புவனா. இரண்டாவது பையனுக்கே இப்போது ஏழு வயதாகிவிட்டது. அவன் ரயிலே பார்த்ததில்லை. புவனா தன் பையன்கள் இருவரிடமும் நாம் ரயிலில் ஏறி மதுரைக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு போகப் போகிறோம் என்று கூறினாள். குழந்தைகள் ரயிலைப் பற்றிதான் சக வகுப்பு மாணவர்களிடம் கேட்டார்கள். அதன் பிரமாண்டத்தைப் பற்றி பெருமையுடன் விவரித்தார்கள்.

கடைசியில் அந்த ரயில் ஏறும் நாளும் வந்தது. ஓட்டலில் எல்லாம் சாப்பிடக் கூடாது நாமே புளியோதரை முதலான சாப்பாட்டை வீட்டிலிருந்தே தயாரித்து கொண்டு செல்வது என்று கண்டிப்புடன் சிவராமன் சொன்னான். குழந்தைகள் எல்லாம் எங்கு எல்லாம் செல்லலாம் என்று மெய் மறந்து அந்தக் கற்பனையிலேயே மிதந்தார்கள்.

ஒரு கோவிலில் கொண்டுபோய் அன்னதானம் செய்து விட்டு வந்தார்கள். அதுபோல் சிவராமனும் ரயிலில் ஏறி விட்டான். அடுத்த ஊரில் ரயில் நின்றது. அவனுக்கு மிகவும் தாகமாகயிருந்தது. அங்குள்ள ஒரு குழாயில் தண்ணீர் அருந்தினான். அங்கு வந்த பிச்சைக்காரன் ஒருவன் சிவராமனிடம் பிச்சை கேட்டான். இல்லை என்று சொன்னாலுமே மிகவும் கெஞ்சினான். அவன் பையிலிருந்த 10 ரூபாய் காயினை ஐந்து ரூபாய் என்று தவறுதலாக நினைத்து கொடுத்துவிட்டான். ரயில் கோச் அருகே வந்ததும் தான் தன் தவறு அவனுக்குத் தெரிந்தது. அதை வாங்கிவிடவேண்டும் என்று நினைத்த சிவராமன் அந்த பிச்சைக்காரனைத் தேடினான்.

அந்த சமயம் ரயிலும் கிளம்பி விட்டது. சிவராமனும் அந்த பிச்சைக்காரணை மனதுக்குள் திட்டிக் கொண்டான்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்திலுள்ள பெஞ்சில் உட்கார்ந்திருந்தான் சிவராமன். 20 நிமிடங்கள் கழித்து ஒரு செய்தி ஒன்றை ரெயில்வே ஒலி பெருக்கியில் கூறினார்கள். அவன் ஏறிவந்த ரயிலும் அவன் பயணம் செய்த பெட்டியும் அதனுடைய அடுத்தடுத்த பெட்டிகளும் கவிழ்ந்துவிட்டது. அனைவரும் உயிரிழந்தனர் என்று ஒலி பரப்பினார்கள்.

சிவராமன் அதிர்ச்சியுற்றான். ஒரு பத்து ரூபாய் தருமம் தன் உயிரையே காப்பாற்றி விட்டதே. தர்மம் தலைகாக்கும் என்பது சரிதான் என்று முடிவெடுத்தான்.

தான் இனிமேல் தர்மம் செய்வது என்ற முடிவை மனதிற்குள் தீர்மானித்தான்.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *