செய்திகள்

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

நெடுந்தீவு, மார்ச் 15–

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மீனவர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில், இலங்கை அரசோடு முதல்கட்ட பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்றது. அடுத்த அடுத்த நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து முதல் முறை கைது செய்யப்பட்டால் எச்சரித்து விடுவிக்கப்படுவதாகவும், இரண்டாவது முறை 6 மாத சிறை தண்டனையும், 3வது முறை ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

15 நாகை மீனவர்கள் கைது

இதன் காரணமாக ஒரு சில தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று மீண்டும் 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது. இன்று அதிகாலை நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15பேர் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *