செய்திகள்

தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு: 664 மனுக்கள் தள்ளுபடி

சென்னை, மார்ச் 29–

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில், 1,085 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27ம் தேதி மாலை 3 மணியுடன் முடிந்தது. 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 73, வடசென்னையில் 67, தென்சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நேற்று காலை 11 மணி முதல் அந்தந்த தொகுதி பொது பார்வையாளர்கள் முன்னிலையில், மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்கள், பிரமாண பத்திரங்களில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பது தேர்தல் நடத்தும் அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மனுவாக ஏற்கப்பட்டது.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள், உரிய ஆவணங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனு பரிசீலனையின்போது சென்னை, கோவை, சேலம், தேனி, நீலகிரியில் சர்ச்சை எழுந்தது. சில இடங்களில் நீண்ட இழுபறிக்கு பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு தாக்கலில் விதிமீறல் உள்ளதாக கூறி நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். தேனி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரமாண பத்திரத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய இயலாததால், அதை ஆய்வு செய்த பிறகே ஏற்க வேண்டும் என எதிர்தரப்பினர் கூறினர்.

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில், 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டு, 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதிப் பட்டியலின் படி, கரூரில் அதிகபட்சமாக 56 மனுக்களும், நாகையில் 9 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

வடசென்னை தொகுதியில் 31 மனுக்கள், தென்சென்னை 23 மனுக்கள், மத்திய சென்னையில் 58 மனுக்கள் என மொத்தம் 80 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 109 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிஇடைத்தேர்தலுக்கு 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.

புதுச்சேரியில்

27 பேரின் மனுக்கள் ஏற்பு

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., பா.ஜ.க. சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், அண்ணா தி.மு.க.வில் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சியில் டாக்டர் மேனகா உள்பட 34 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது.

அப்போது அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி பெயரிலான சொத்து விவரங்களை பிரமாண பத்திரத்தில் காட்டவில்லை. அவர் அமைச்சராக இருந்து தேர்தலில் போட்டியிடக்கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார். ஆனால் அமைச்சராக இருந்து தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடம் உள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் கூறினார். மேலும் சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை தருமாறு கூறினார். ஆனால் ஆவணங்கள் எதுவும் வழங்கப்படாததால் அமைச்சர் நமச்சிவாயத்தின் மனு ஏற்கப்பட்டது.

இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்பட 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதிய ஆவணங்கள் இணைக்கப்படாதது உள்பட பல்வேறு காரணங்களுக்காக 7 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டும் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்களது மனுவை திரும்ப பெறுவதற்கு அவகாசம் நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு முடிகிறது. இதனையடுத்து சின்னங்களுடன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *