செய்திகள்

‘டெட்ரா பேக்’ மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு, நவ.24-–

‘டெட்ரா பேக்’ மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோட்டுக்கு நேற்று வந்த முத்தமிழ்த்தேருக்கு வரவேற்பு அளித்த தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தேரில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி போன்ற பண்டிகை யின்போது அனைத்து பொருட்களின் விற்பனையும் அதிகமாக காணப்படும். அதற்காக திட்டமிட்டு மது விற்பனை நடத்தப்படவில்லை. மது விற்பனையை தடுப்பதும் கடினம். மகிழ்ச்சிக்காக பலர் மது குடிக்கின்றனர். இருந்தாலும், மது குடிப்பதை குறைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கமாகும். இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குழு வைத்து ‘கவுன்சிலிங்’ கொடுத்து வருகிறோம். எனவே மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. மது குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோளாகும்.

‘டெட்ரா பேக்’ மது விற்பனை நடைமுறை மற்ற மாநிலங்களில் உள்ளது. அதில் சில நன்மைகளும் உள்ளன. பாட்டில் பயன்பாடு குறைவதன் மூலமாக விவசாயி களுக்கான பிரச்சினை தீரும். அதுதொடர்பான ஆய்வு அறிக்கை பெறப்பட்டு உள்ளது.

எனவே தமிழ்நாட்டில் ‘டெட்ரா பேக்’ மது விற்பனை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

தமிழகத்தில் மது விற்பனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி 500 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. ஒரே நாளில் மது குடிக்கும் பழக்கத்தை மாற்றிவிட முடியாது. பல நடவடிக்கைகளை புதிதாக செய்து வருகிறோம். அது வெற்றி பெறும்போது பிரச்சினை முடிவுக்கு வரும்.

விதிமுறையை மீறி மது விற்பனை செய்யப்படுவதில்லை. அதுதொடர்பான புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

‘டெட்ரா பேக்’ மது என்றால் என்ன?

‘டெட்ரா பேக்’ மது என்பது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் ஆகும். அதாவது பாட்டில் பயன்பாட்டுக்கு பதில் குளிர்பானங்கள் அட்டை பெட்டிகளில் விற்பனை செய்வது போல மதுபானங்கள் சிறிய அட்டை பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்வதே ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *