செய்திகள்

ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு பாரதீய ஜனதாவின் கைப்பாவையாக உள்ளது

முதல்வரின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா குற்றச்சாட்டு

சிறீகாகுளம், ஜன. 24–

ஆந்திராவில் ஜெகன் மோகன் அரசு பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று அவருடைய தங்கையான ஒய்.எஸ். ஷர்மிளா குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா சிறீகாகுளம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் அவையில் கட்சி தொண்டர்கள் இடையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா பேசியதாவது:-

எனது தந்தை மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நடைபயணம் இச்சாபுரத்தில் நிறைவடைந்தது. மக்களின் அவல நிலையைப் புரிந்து கொண்டு, தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் சார்பில் முதலமைச்சரான பிறகு, ஏழைகளுக்கு 46 லட்சம் வீடுகளை இலவசமாக கட்டிக் கொடுத்தார். என்னுடைய ஆந்திர அரசியல் பயணமும் இந்த மண்டபத்தில்தான் தொடங்குகிறது.

பாஜகவுடன் ஒய்எஸ்ஆர் கட்சி

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி உயிருடன் இருக்கும் வரை பா.ஜ.க.வுக்கு எதிரியாக இருந்தார். ஆனால் தற்போது ஆந்திராவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இங்கு சில கட்சிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. ஆந்திராவில் பாரதீய ஜனதாவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. ஆனால் இங்குள்ள அரசு பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் ஜெகன்மோகன் ஒருமுறை கூட பா.ஜ.க.விடம் பேசவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து நிச்சயம் வரும். அதற்கு ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மக்கள் நலனுக்காக ஆலோசனை செய்யும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. இவ்வாறு ஒய்.எஸ்.சர்மிளா பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *