செய்திகள்

ஜூன் 4 ந்தேதி சூரியன் நாட்டுக்கு புதிய விடியலை தரும்: ராகுல் உறுதி

டெல்லி, ஜூன் 1–

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆணவத்தின், கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறிவிட்ட பாஜக அரசுக்கு ‘இறுதி அடி’யாக உங்கள் வாக்குகளை அளியுங்கள் என வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 57 தொகுதிகளுக்கு மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் வராணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

குறிப்பாக இந்த தேர்தல் மிக முக்கிய வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். அவர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக அஜய் ராய் – காங்கிரஸ், அதர் ஜமால் லாரி -பிஎஸ்பி, கோலிசெட்டி சிவ குமார்- யுக துளசி கட்சி, ககன் பிரகாஷ் யாதவ்-அப்னா தளம், மற்றும் சுயேச்சைகள் தினேஷ் குமார் யாதவ், சஞ்சய் குமார் திவாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் காலையிலேயே பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் வன்முறை நடந்தாலும் பல இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்களித்து வருகின்றனர்.

இறுதி அடி கொடுங்கள்

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள வேண்டுகோள் பதிவில் கூறி இருப்பதாவது:–

“அன்பான நாட்டுமக்களே!.. இன்று 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரையிலான போக்குகளில் இருந்து நாட்டில் இந்தியா கூட்டணி அரசாங்கம் அமைக்கப் போகிறது என்பது தெளிவாகிறது. கொளுத்தும் வெயிலிலும், ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க நீங்கள் அனைவரும் வாக்களிக்க வந்துள்ளீர்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். இன்றும் தயவு செய்து பெருந்திரளாக வந்து ஆணவத்தின், கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறிவிட்ட இந்த அரசுக்கு ‘இறுதி அடி’யாக உங்கள் வாக்குகளை அளியுங்கள். ஜூன் 4-ம் தேதி சூரியன் நாட்டுக்கு புதிய விடியலைக் கொண்டுவரப் போகிறது.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று 2024 நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டம். இளைஞர்கள் மற்றும் இளம் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். ஒன்றாக இணைந்து நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *