செய்திகள்

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள், பெண்கள், ஏழைகளை பா.ஜ.க. அரசு வலுப்படுத்தி வருகிறது

பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர், பிப்.17-–

வாரிசு அரசியல் என்ற தீய வளையத்தில் சிக்கிக்கொண்டதால், காங்கிரசில் இருந்து ஒவ்வொருவரும் விலகி வருகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 பிரிவினரை அரசு வலுப்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ‘வளர்ந்த பாரதம், வளர்ந்த ராஜஸ்தான்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். ரூ.17 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த சில வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் ஒரே குறிக்கோள், மோடியை எதிர்ப்பது மட்டுமே. மோடியை எதிர்ப்பதற்காக சமூகத்தை பிளவுபடுத்தும் விஷயங்களையும் அவர்கள் பரப்பி வருகிறார்கள். ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு மோடியை வசைபாடுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு காங்கிரஸ் அவரை அரவணைக்கும்.

வாரிசு அரசியல் என்னும் தீய வளையத்தில் காங்கிரஸ் சிக்கிக்கொண்டுள்ளது. அதனால் அக்கட்சியில் இருந்து ஒவ்வொருவரும் விலகி வருகிறார்கள். ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே அங்கு பார்க்க முடிகிறது.

ஆக்கப்பூர்வமான கொள்கைகளை வகுப்பதற்கான தொலைநோக்கு பார்வை காங்கிரசிடம் இல்லை என்பதுதான் அதன் பெரிய பிரச்சினை. எதிர்காலத்தை பார்ப்பதும் இல்லை, அதற்கான செயல்திட்டமும் இல்லை.

மோடி தனது உத்தரவாதங்களை நிறைவேற்றியவுடன் சிலர் தூக்கம் இழந்து விட்டனர். காங்கிரசுக்கு ராஜஸ்தான் மக்கள் பாடம் கற்பித்தனர். ஆனாலும் அது ஏற்றுக்கொள்ள வில்லை.

‘வளர்ந்த பாரதம்’ என்ற சொல்லைக்கூட காங்கிரஸ் விரும்புவது இல்லை. ஏனென்றால், அதற்காக மோடி பணியாற்றி வருகிறார். மோடி வலியுறுத்துவதால், ‘மேக் இன் இந்தியா’, ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு’ ஆகிய வார்த்தைகளும் காங்கிரசுக்கு பிடிக்காது.

பொருளாதாரத்தில் 5-வது இடத்தை இந்தியா பிடித்தபோது, ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், காங்கிரஸ் மகிழ்ச்சி அடையவில்லை. அடுத்த ஆட்சிக்காலத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று மோடி சொல்லும்போது, நாடு நம்பிக்கை யுடன் இருக்கிறது. ஆனால் காங்கிரசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மோடி என்ன செய்தாலும், சொன்னாலும் அதற்கு எதிராக செய்தும், பேசியும் வருகிறது. அப்படி செய்வது நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதை கைவிடுவது இல்லை.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மின்சார தட்டுப்பாட்டால் நாடே இருண்டு கிடந்தது. மின்சாரம் வந்தால் கூட சற்று நேரத்தில் போய்விடும். கோடிக்கணக்கான வீடுகளுக்கு மின்சார இணைப்பே இல்லை. மின்சாரம் இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது. காங்கிரஸ் பணியாற்றிய வேகத்தில் இதற்கு தீர்வு காண பல்லாண்டுகள் ஆகியிருக்கும்.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், மின்சார தட்டுப்பாட்டில் இருந்து நாட்டை விடுவிக்க கவனம் செலுத்தினோம். சூரிய மின்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சூரிய மின்உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும். காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் பெரிய ஊழல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றித்தான் மக்கள் பேசி வந்தனர். தங்கள் உயிரையும், வேலைவாய்ப்பையும் பற்றி கவலைப்பட்டனர். ஆனால் இன்று மக்கள் பெரிதாக கனவு காண்கின்றனர்.

சமீபத்தில் நான் ஐக்கிய அரபு அமீரகம் சென்றபோது, இந்தியா அடைந்த முன்னேற்றம் குறித்து அங்குள்ள தலைவர்கள் வியந்தனர்.

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 பிரிவினரை அரசு வலுப்படுத்தி வருகிறது. எங்களுக்கு இவர்கள்தான் 4 மிகப்பெரிய சாதிகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரியானா மாநிலம் ரேவாரியில் புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 203 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,650 கோடி செலவில் எய்ம்ஸ் கட்டப்படுகிறது.

இவ்விழாவில், ரூ.5 ஆயிரத்து 450 கோடி செலவில், குருகிராம் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.240 கோடி செலவில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

மொத்தம் ரூ.9 ஆயிரத்து 770 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *