சிறுகதை

‘‘சிறுகதை’’-ராஜா செல்லமுத்து

அதுவரையில் கலகலப்பாக வந்துகொண்டிருந்த ஷேர் ஆட்டோ அமுதினி வந்ததும் அமைதியானது. அத்தனை பேரும் இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்? இப்படியுமா இறைவன் படைக்க வேண்டும் ? எது பேசி சிரித்தாலும் இங்கு தவறாகத்தான் இருக்கிகும். அதனால் ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக் கொண்டிருக்க வில்லை. செல்போனில் படம் பார்த்துக் கொண்டு வந்தார்கள்.

அமுதினி அந்த ஷேர் ஆட்டோவில் ஏறுவதற்கு கூட ஒருவர் உதவி செய்ய வேண்டி இருந்தது. மேலே ஏறி அவள் சீட்டில் அமர்ந்த போது பிறந்த குழந்தை இருப்பதைப் போல் தெரிந்தாள்.

அவளின் கை கால் எல்லாம் அதன் அச்சிலேயே இருந்தன. ஆனால் முகம் மட்டும் உதிர்ந்த மனிதருக்காக தோரணையிலிருந்தது அமுதினியைப் பார்ப்பதற்கு முன்னால் முகிலன் கண்ணனும் அவ்ளோ அழகாக பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள்.

அமுதினியைப் பார்த்த பிறகு வாய் அடைத்து அமர்ந்தார்கள். இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வுள்ள முகிலன் அப்போது சிரிப்பு வரும் ஒரு காமெடியை சொல்ல அதற்கு கண்ணன் அமைதியாக இருந்தான்.

என்ன கண்ணன் இவ்வளவு பெரிய காமெடியைச் சொல்றேன். சாதாரணமாக உட்கார்ந்து இருக்கிறீயே என்று முகிலன் எதிரே அவன் காதருகே போன கண்ணன்

‘‘இல்ல முகிலன். இது தப்பு; நீங்க நல்ல காமெடி சொல்லுவீங்க. எனக்கு தெரியும் .ஆனா இந்த நேரத்துல நான் அந்த காமெடி நினைச்சு சிரிச்சேன்னா நமக்கு எதிரில உட்கார்ந்து இருக்கிற அந்த இரண்டு அடி பெண்ணை பார்த்து தான் நம்ம சிரிச்சோம் அப்படின்னு நெனப்பாங்க. அவங்களுக்கு அது தெரியாது. நம்ம காமெடிக்கு சிரிப்பாேம். நம்மள தான் இவங்க கேலி பண்ணி சிரிக்கிறாங்கன்னு அவங்க மனசு புண்படும் வேண்டாமே. அந்தப் பெண் இறங்குற வரைக்கும் நம்ம எதுவும் பேச வேண்டாம் .சிரிக்க வேண்டாம்’’ என்று கண்ணன் சொல்ல

அதுவும் சரிதான் என்று நினைத்துக் கொண்டான் முகிலன். இவர்கள் இரண்டு பேர் மட்டுமல்ல அந்த ஆட்டோவில் இருந்த அத்தனை பேரும் அமைதியாக தான் இருந்தார்கள்.

ஏன் இவர்கள் இவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் இவர்களுக்கு ஏதும் பிரச்சனையா? இல்லை நாம் வந்த பிறகுதான் இவர்கள் அமைதியாக இருக்கிறார்களா? என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள் அமுதினி.

சிலநிறுத்தங்களில் சிலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். அப்படி புதிதாக வந்தவர்கள் கூட அமுதினியை ஏற இறங்க பார்த்துவிட்டு அமைதியானார்கள்.

ஆனால் கடைசி நிறுத்தம் வருவதற்கு இன்னும் சில மணித்துளிகள் இருக்கின்றன. இவர்கள் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள் ? என்பது கண்டுபிடித்து விட வேண்டும் என்று அமுதினி நினைத்தாள்.

அத்தனை பேர் அமர்ந்திருந்த அந்த ஷேர் ஆட்டோவில் அத்தனை பேரையும் பார்த்து வாய் விட்டு பேசினாள் அமுதினி

எல்லாருக்கும் வணக்கம் .என் பெயர் அமுதினி. எல்லாருமே என்ன பார்த்ததும் பரிதாபப்படுகிறாங்க. பாவப் படுறிங்க .எனக்கு அது பிடிக்கல. சிலர் ஆறடி இருப்பாங்க. சிலர் அஞ்சரை அடி இருப்பாங்க. சிலர் கலர்; சிலர் கறுப்பு; எனக்கு கடவுள் கொடுத்தது இரண்டடி இரண்டு அங்குலம் தான் .அதுக்காக நான் என்னுடைய உணர்வுகளையும் என்னுடைய திறமையும் அழிச்சுக்க விரும்பல .நான் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறேன், யூனிவர்சிட்டில கோல்டு மெடல். நிறைய ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்ச இருக்கேன் .எக்கச்சக்கமாக பரிசுகளும் வாங்கி இருக்கேன். இப்போ பிஎச்டி முடிச்சுட்டு காலேஜ்ல லெக்சரர் வேலைக்கு டிரை பண்ணிட்டு இருக்கேன். அதனால உங்கள்ல இருந்து உயரத்துல வேணா நான் கம்மியா இருக்கலாம். நிச்சயமா மத்தவங்களை விட நான் எல்லாத்துக்கும் விட உயரமானவ தான்.

அதனால என்ன பார்த்து நீங்க பரிதாப படாதீங்க. பாவப்படாதீங்க எனக்குன்னு ஒரு உலகம் இருக்கு. எனக்குன்னு சில ஆசைகள் இருக்கு. எனக்கு சில மகிழ்ச்சிகள் இருக்கு.நானும் அத அனுபவிக்கணும். சந்தோசப்படணும். உங்களுக்கு இருக்கிற ஃபீலிங் தான் எனக்கும் இருக்கு.

இந்த ஆட்டோவில் உட்கார்ந்து இருக்கிற யாரும் மத்தவங்களை விட சரியானவங்க இல்ல. ஒருத்தர் உயரமாக இருக்கலாம் .ஒருத்தன் குண்டா இருக்கலாம். ஒருத்தவங்க கருப்பா இருக்கலாம் .ஒருத்தவங்க சிகப்பா இருக்கலாம் .அதுக்காக யாரும் யாரையும் பார்த்து பாவப்படுறதில்லை. அது மாதிரி தான் என்னை நீங்க பார்க்கணும். என்னோட உயரம் அவ்வளவுதான் எனக்கு ஏத்த வாழ்க்கை எனக்கான சந்தோஷம். உங்களை மாதிரி தான் எனக்கு இருக்கும். எனக்குன்னு தனியா சூரியன் வெயில் அடிக்கிறது இல்ல. மழை பெய்வது இல்லை. அதனால நீங்க மௌனமா வரணும்னு அவசியம் இல்ல .சந்தோஷமா இருங்க. அப்பதான் நானும் சந்தோஷமா இருக்க முடியும். இல்ல நீங்க பாவம் பார்த்தா எனக்கும் பரிதாபம் ஏற்பட்டு நான் தற்கொலைக்கு கூட போயிடுவேன்.

நீங்க என்னை எவ்வளவு தூரத்துக்கு சந்தோஷப் படுத்துகிறீர்களோ அவ்வளவு தூரத்துக்கு வரும் என்னோட வாழ்க்கை நீளம் என்று அமுதினி சொன்னபோது அத்தனை பேரும் கைதட்டினார்கள்.

அடுத்த நிமிடத்திற்கெல்லாம் அமுதினி செல்போனில் இருந்து அழகான ஒரு குத்துப் பாடல் வந்தது.

அந்தக் குத்துப் பாடலுக்கு ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்த சிலர் குத்தாட்டம் போட,

அதுவரை அமைதியாக இருந்த அந்த ஷேர் ஆட்டோ இப்போது கலகலப்பானது .

அத்தனை சந்தோஷத்தையும் அள்ளிப் பருகிய அமுதினி இப்போது மற்றவர்களை எல்லாம் விட உயரமாகத் தெரிந்தாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *