செய்திகள்

கனடா தேர்தலில் இந்தியா தலையிடும்: உளவுத்துறை எச்சரிக்கையால் சர்ச்சை

ஒட்டாவா, பிப். 04–

கனடாவில் நடைபெற உள்ள தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவு அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கனடா நாட்டுக்கான விசா சேவை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்தது.

மீண்டும் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து கனடாவில் வசிக்கும் இந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் வீடியோக்களைப் வெளியிட்டனர். இதற்கு கனடா பொது பாதுகாப்புத் துறை ‘இந்துகளுக்கு எதிராக பகிரப்படும் விடியோ புண்படுத்தக் கூடியது மற்றும் வெறுக்கத்தக்கது. வெறுப்புணர்வுக்கு ஒருபோதும் கனடா இடமளிக்காது. அதேபோல், மக்களைப் பிளவுபடுத்த மட்டுமே உதவும் மிரட்டல் அல்லது பயத்தைத் தூண்டுதல் போன்ற செயல்களுக்கும் இந்த நாட்டில் இடமில்லை என தெரிவித்தது.

இப்படியாக, கனடா – இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் சில மாதங்களாக அவை ஓய்ந்து காணப்பட்டன.

இந்த நிலையில் கனடா – இந்தியா உறவில் மீண்டும் சிக்கல் கிளம்பியுள்ளது. கனடாவில் நடைபெற உள்ள தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவு அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தலையீட்டால் கனடா ஜனநாயகத்திற்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த உளவு அமைப்பு தனது அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இந்தியா மற்றும் கனடா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *