செய்திகள்

அமெரிக்காவை இந்தியா பலவீனமாகப் பார்க்கிறது : குடியரசுக் கட்சியின் நிக்கி ஹேலே விமர்சனம்

நியூயார்க், பிப். 08–

அமெரிக்காவை இந்தியா பலவீனமாகப் பார்க்கிறது என்று, அமெரிக்க குடியரசுக் கட்சி சார்பிலான அதிபர் வேட்பாளர் போட்டியிலுள்ள நிக்கி ஹேலே விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சியும், குடியரசுக் கட்சியும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவை இந்தியா பலவீனமாகப் பார்ப்பதாகவும், அமெரிக்காவை நம்பவில்லை என்றும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருக்கும் நிக்கி ஹேலே (Nikki Haley) கூறியிருக்கிறார்.

ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸ் (Fox Business News) ஊடகத்துடனான நேற்றைய நேர்காணலில் பேசிய நிக்கி ஹேலே, “மோடியிடம் நான் பேசியிருக்கிறேன். இந்தியா எங்களுடன் (அமெரிக்கா) கூட்டாளியாக இருக்க விரும்புகிறது. மேலும், அவர்கள் ரஷ்யாவுடன் கூட்டாளியாக இருக்க விரும்பவில்லை.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், அமெரிக்காவை இந்தியா நம்பவில்லை. அமெரிக்காவை வழிநடத்துவதில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை. அமெரிக்காவை இந்தியா பலவீனமாகப் பார்க்கிறது. அதனால், புத்திசாலித்தனமாக விளையாடுவதாக ரஷ்யாவுடன் நெருக்கமாக இந்தியா இருக்கிறது.

இந்தியா மீண்டும் வரும்

ஏனென்றால் ரஷ்யாவிடமிருந்துதான் அதிகப்படியான ராணுவ உபகரணங்களை அவர்கள் பெறுகிறார்கள். எனவே, நாம் நமது பலவீனத்தை துரத்திவிட்டு மீண்டும் அமெரிக்காவை வழிநடத்தத் தொடங்கும்போது, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் அனைத்தும் நம்மிடம் மீண்டும் வரும்.

உலக பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானும், இந்தியாவும் தற்போது பில்லியன் டாலர்களில் பங்காற்றுகின்றன. அப்படியிருக்க, சீனாவைச் சார்ந்திருக்கக் கூடிய தேவை குறைகிறது. எனவே, அமெரிக்கா தனது கூட்டணிகளை உருவாக்கத் தொடங்க வேண்டும். அதேசமயம், நிதி ரீதியாக சீனா நல்ல நிலையில் இல்லை. அவர்களின் அரசு அதிக கட்டுப்பாட்டில் இருப்பதை நீங்களே பார்க்கிறீர்கள் என்று கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *