செய்திகள்

வேளச்சேரி ரெயில் நிலைய–பஸ் நிறுத்தம், கோயம்பேடு சந்திப்பு அருகே நடைமேம்பாலம்

சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை,ஜூன்26-–

வேளச்சேரி ரெயில் நிலைய– பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு சந்திப்பு அருகே நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து பேசிய அந்தத் துறையின் அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

* பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு சென்னையில் மரபு கட்டிடங்கள் வட்ட அலுவலகம் புதிதாக உருவாக்கப்படும்.

* சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் இல்லம், பூந்தமல்லி விக்டரி நினைவு பார்வையற்றோர் பள்ளிக் கட்டிடம், நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கியச் சங்க கட்டிடம், திருச்சி டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக் கட்டிடம், கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கட்டிடம், ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு நதிக்கரையில் உள்ள தேசிங்கு ராஜா, ராணிபாய் நினைவு சின்னங்கள் ஆகிய 6 பாரம்பரியக் கட்டிடங்கள் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.

* 4 தரக்கட்டுப்பாட்டு உப கோட்ட அலுவலகங்களுக்கு ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

ரூ.1,055 கோடியில்

பணிகள்

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை செயல்படுத்த 2-ம் கட்டமாக ரூ.1,055 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, ஒரு புறவழிச்சாலை, ஒரு நடைமேம்பாலம் அமைத்தல், 6 சாலைகளை அகலப்படுத்துதல், 3 ஆற்றுப்பாலங்கள் மற்றும் ஒரு மழைநீர் வடிகால் கட்டுதல் பணிகள் மற்றும் 6 புறவழிச்சாலைகள், ஒரு ஆற்றுப்பாலம் அமைக்க நிலஎடுப்புப் பணி ஆகியவை மேற்கொள்ளப்படும்.

* நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைக்கப்படும்.

* பாலங்களை ஆய்வு செய்து பழுதுகள் இருந்தால் அதை சீரமைக்க நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு உருவாக்கப்படும்.

* அனைத்து கால நிலைகளிலும் தங்குதடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் 50 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.

* சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* சென்னையில் வேளச்சேரி ரெயில் நிலைய – பஸ் நிறுத்தம் மற்றும் சென்னை உள்வட்டச் சாலையில் கோயம்பேடு சந்திப்பு அருகே நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படும்.

* பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்கும் நோக்கத்தில், காமாட்சி ஆஸ்பத்திரி முதல் துரைப்பாக்கம் வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.

* நிலச்சரிவினால் ஏற்படும் உயிரிழப்பு, பொருட்சேதங்களை தவிர்க்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைப்பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* நடப்பாண்டில் 600 கி.மீ. நீள ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள், இதர மாவட்டச் சாலைகளாக ரூ.680 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *