செய்திகள்

பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா

சமூக நீதியின் கலங்கரை விளக்கம் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

டெல்லி, ஜன. 24–

சுதந்திர போராட்ட வீரரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவில் பிறந்த கர்பூரி தாக்கூர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் சென்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கர்பூரி தாக்கூர், 1977 – 1979 காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தபோது ஜனதா கட்சியில் ஐக்கியமானார்.

அரசு பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு இடஒதுக்கீடு கோரி செயல்பட்டவர். பீகார் மாநில முதல்வராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் 12 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தவர். எனவே, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக திகழ்ந்த கர்பூரி தாக்கூர் பிப்ரவரி 17, 1988 இல் காலமானார். இதனால், கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பிரதமர் மோடி பாராட்டு

இந்த நிலையில், கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்தார். கர்பூரி தாக்கூர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவரது 100வது பிறந்த நாளை முன்னிட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், சமூக நீதியின் கலங்கரை விளக்கமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை வழங்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் அவரது பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த அங்கீகாரம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்பதில் உறுதியானவராக இருந்த அவரது முயற்சிகளுக்கு கிடைத்த சான்றாகும் என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *