செய்திகள்

நோபல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா

ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா (1904 – 1973) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1971 –ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். இவரது இயற்பெயர் ரிக்கார்டோ இலீசர் நெஃப்டாலி ரேயஸ் பசால்தோ. 1920 –ஆம் வருடம் கவிதை எழுதத் தொடங்கிய போது, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் மேல் கொண்டிருந்த மரியாதையின் காரணமாக பாப்லோ நெருடா எனும் புனைப்பெயரை வைத்துக் கொண்டார். பின்னர் அதையே சட்டப்பூர்வமான பெயராகவும் மாற்றிக் கொண்டார். பால் (Paul) எனும் பெயரின் மறுவடிவே ஸ்பானிஷ் மொழியில் ‘பாப்லோ’ ஆகும்.

கவிஞராக மட்டுமின்றி, அரசுத் தூதராகவும், சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், பொதுவுடைமைத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர் பாப்லோ நெருடா.

சிறுவயதில் இவரைப் பெற்ற தாய் காலமானதும் இவரது தந்தை மறுமணம் செய்து கொண்டார். தனது எட்டாவது வயதில் இவர் முதலில் எழுதிய கவிதை பாசத்துடன் இவரை வளர்த்த சிற்றன்னையைப் பற்றியதே. 13_வது வயதிலேயே கவிஞராகப் புகழ் பெற ஆரம்பித்தார். புகைவண்டி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நெருடாவின் தந்தைக்கு தன் மகன் இலக்கியத்தில் ஈடுபடுவதில் விருப்பம் இருக்கவில்லை. நல்ல ஊதியம் வரக்கூடிய தொழிலில் ஈடுபட வேண்டுமென விரும்பினார். நெருடாவோ வளரும் பருவத்தில் தன் அனுபவங்களைக் கவிதைகள் மூலமாக வெளிப்படுத்தும் உந்துதலில் இருந்தார். தான் இலக்கியத்தில் ஈடுபடுவது தந்தைக்கு வருத்தம் தரும் என்பதும் இவர் புனைப்பெயர் வைத்துக் கொள்ள ஒரு காரணியாக இருந்திருக்கிறது.

19_ஆம் வயதில் “Books of Twilights” எனும் முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. விதவிதமான பாணிகளில் எழுதினார். அதீத கற்பனையுடைய சர்ரியலிஸம், சரித்திரக் காவியம், அரசியல் கொள்கை அறிக்கைகள் ஆகியவற்றோடு உணர்ச்சி மிக்க காதல் கவிதைகளையும் எழுதினார். 1924_ஆம் ஆண்டு அவரது இருபதாம் வயதில் வெளியான, அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட Twenty Love Poems and a Song of Despair என்ற கவிதைத் தொகுப்பு ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் இவரைப் பிரபலமாக்கியது. 1953 –ஆம் வருடம் ஸ்டாலின் அமைதிப் பரிசினைப் பெற்றவர் நெருடா. ‘உலகெங்கிலும் பூமியின் தோல் ஒன்றே ஆகும்’ (The skin of the earth is same everywhere) எனும் இவரது பாடல் வரி மிகப் பிரபலமான ஒன்று.

1964 –ஆம் வருடமே நோபல் பரிசுக்காக இவர் பெயர் பரிசீலிக்கப் பட்டு, பல எதிர்ப்புகளின் காரணமாக வேறொருவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 1971_ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டதாயினும் அதுவும் அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. தேர்வுக் குழுவில் இருந்த பலர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கினை பாப்லோ நெருடா புகழ்ந்ததை மறக்கவில்லை. ஆனால் நெருடாவின் ஸ்வீடன் மொழிபெயர்ப்பாளரான ஆர்டுர் லன்ட்க்விஸ்ட் என்பவரின் முயற்சியால் நோபல் பரிசு கிட்டியது. நோபல் பரிசுக்கான ஏற்புரையில் ‘ஒரு கவிஞன் ஒரே நேரத்தில் ஒற்றுமைக்கும் தனிமைக்கும் உந்து சக்தியாகத் திகழ்கிறான்’ எனக் குறிப்பிட்டார் பாப்லோ நெருடா.

அடுத்த வருடத்தில் (1972) ஸ்ட்ரூகா கவிதை சாயங்காலங்கள் அமைப்பினால் மரியாதைக்குரிய தங்கச் சர விருதினைப் பெற்றிருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் அவரது புத்தகங்கள் உலகின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளாவிய புகழ் பெற்றிருந்தார்.இவரது கவிதைகளை வாசித்திராதவர்களும் இவர் பெயரை அறிந்திருந்தார்கள். கவிதைகளையோ அதன் மொழிபெயர்ப்புகளையோ வாசித்தவர்கள் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பெரும்பங்கினை வியந்தார்கள். இவரது அரசியல் கொள்கைகளோடு ஒத்துப் போகாதவர்களும், வேறுபல காரணங்களுக்காக வெறுத்தவர்களும் கூட இவரது எழுத்துக்களைல் கவரப் பட்டிருந்தார்கள்.

நெருடா தன் வாழ்நாளில் பல நாடுகளில் தூதரகப் பணியினை ஏற்றுச் செயலாற்றியிருக்கிறார். அரசுத் தூதராக சுமார் ஆறு ஆண்டுகள் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ரங்கூனில் பணியாற்றியிருக்கிறார். சிலியன் கம்யூனிஸக் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 1948 –ஆம் வருடம் ஜனாதிபதி கேப்ரியல் சிலி நாட்டில் கம்யூனிசத்தை ஒழித்த போது நெருடாவைக் கைது செய்ய அரசு ஆணை பிறப்பித்தது.

நண்பர்கள் பல மாதங்கள் அவரைத் தம் வீட்டின் அடித்தளத்தில் மறைந்து வாழ வைத்திருக்கிறார்கள். பின்னர் மலை வழியாகத் தப்பித்து அர்ஜென்டைனா சென்றிருக்கிறார். ஆனால் வருடங்கள் பல சென்றதும், பொதுவுடமைவாதியும் சிலி நாட்டின் ஜனாதிபதியுமான சல்வேடார் ஆலன்டே நெருடாவைத் தன் ஆலோசகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார், நோபல் பரிசு பெற்று சிலி நாட்டுக்குத் திரும்பிய நெருடாவை எஸ்டாடியோ நேஸியோனல் அரங்கில் 70000 மக்கள் முன்னிலையே உரையாற்ற வரவேற்றுக் கெளரவித்திருக்கிறார்.

1973 –ஆம் வருடம் இவருக்குப் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதே வருடம் மாரடப்பினால் இறந்ததாகப் பதியப் பட்டது. ஆனால் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டன. மொத்தத்தில், நெருடாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியத் தகவல்கள், நெருடலான பக்கங்களையேக் கொண்டுள்ளது. வோகல்செங் என்பவருடானான இவரது திருமணம் தோல்வியுற மெக்ஸிகோவில் விவாகரத்து பெற்றிருக்கிறார். சமூகத்தின் பேச்சுகளிலிருந்து தப்பிக்க ஸ்பெயின் நாட்டை விட்டே தன் நோயுற்ற ஒரே குழந்தையுடன் வெளியேறி விட்டார் வோகல்செங்.

நெருடா அதன் பின்னர் மனைவியும் குழந்தையையும் தனது வாழ்நாளில் பார்க்கவேயில்லை. விவாகரத்து பெற்ற சில மாதங்களுக்குப் பின் பிரான்ஸ் நாட்டில் டெலியா டெல் கேரில் என்பவருடன் வாழ்ந்தவர் அவரைத் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் சிலி நாட்டு அதிகாரிகள் முதல் மனைவியுடனான இவரது விவாகரத்து சட்டப்பூர்வமானதன்று என இரண்டாம் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை.

2018–ஆம் ஆண்டு சிலி நாட்டின் சான்டியகோ விமான நிலையத்திற்கு பாப்லோ நெருடாவின் பெயரை வைக்க சிலி அரசுக் கலாச்சாரக் குழு பரிந்துரைத்து வாக்களித்த போது அந்நாட்டின் பெண்ணியவாதிகளால் பெரும் கண்டனம் எழுந்தது. 1925–ஆம் ஆண்டு பாப்லோ நெருடா உடன் பணியாற்றிய பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதால் அரசு அவருக்கு அத்தகைய மரியாதையைக் கொடுக்கக் கூடாது எனப் பல பெண்ணிய அமைப்புகள் போராடினர். பெரும் புகழ் பெற்றிருந்தாலும் சிலி நாட்டில் சர்ச்சைக்குரிய நபராகவே இன்றளவிலும் பார்க்கப்படுகிறார் பாப்லோ நெருடா.

#spanishwriter #PabloNeruda #poetry #literature

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *