செய்திகள்

‘நீட்’ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்கள் தகுதி நீக்கம்

தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி, ஜூன் 24-

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உள்பட 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடந்த தேர்வை சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வின்போதே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்களை பெற்று இருந்தனர். அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் இந்த முழு மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்ததும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். பீகாரில் ஒரு வீட்டில் தீயில் எரிந்த நிலையில் இருந்த வினாத்தாள்கள் மற்றும் காசோலைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் தெரிவித்தது. அதனை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

இது ஒருபுறம் நடந்து கொண்டு இருந்த நிலையில். தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபோத்குமார் நேற்று முன்தினம் திடீரென்று நீக்கப்பட்டார். அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில் இந்திய வர்த்தக மேம்பாட்டு தலைவரான பிரதீப் சிங் கரோலியாவுக்கு அந்த பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பான வழக்கை மாநில போலீசார் விசாரித்து வந்தநிலையில், இந்த வழக்கு சி.பி.ஐஇ வசம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது. முக்கிய ஆவணங்கள் அடிப்படையிலும், மத்திய கல்வி அமைச்சகம் கொடுத்த குறிப்பின் பேரிலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் குஜராத் மாநிலம் கோத்ரா மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சி.பி.ஐ. சிறப்புக் குழுக்கள் விரைந்துள்ளன. அவர்கள் மாநில போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளின் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, தங்களது விசாரணையை தொடங்குவார்கள்.

இந்த முறைகேடுகள் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 120-பி (குற்றச் சதி) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் லாத்தூரில் தனியார் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் சஞ்சய் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான் பதான் ஆகிய 2 ஆசிரியர்களை நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். அவர்களிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 2 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பியடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகார்களின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில், நேற்று 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்தது. இவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே விவகாரத்தில் 63 மாணவர்கள் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். மேலும் குஜராத் மாநிலம் கோதாராவில் நடந்த நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 30 மாணவர்கள் நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆக மொத்தம் 110 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்காக கைது செய்யப்பட்ட சிலருக்கு பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பல்தேவ் குமார், முகேஷ் குமார், பங்கு குமார், ராஜீவ் குமார், பரம்ஜீத் சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நாலந்தாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட பல்தேவ் குமார்தான் தேர்வுக்கு முந்தைய நாள், வினாத்தாள் கசிய விடும் முக்கியா கும்பலிடம் இருந்து விடை எழுதப்பட்ட விடைத்தாளை பி டி எப் முறையில் பெற்று தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினியோகித்தவர் என போலீசார் தெரிவித்தனர். நீட் முறைகேடு வழக்கில் பீகாரில் இதுவரை மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *