செய்திகள் நாடும் நடப்பும்

தீ விபத்தில்லா சிவகாசி உருவாக வழி காண்போம்


ஆர்.முத்துக்குமார்


சமீபமாக சிவகாசி பற்றிய செய்தி என்றாலே நெஞ்சம் படபடக்கிறது. காரணம் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்தா? எத்தனை பேர் பலி? என்ற கேள்விகள் தான் நம்முன் நிற்கிறது.

ஆலைகளில் பாதுகாப்புக்காக பல விதிமுறைகள் உண்டு. அதைக் கண்டிப்பாக பின்பற்றிட பல திடீர் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இது இன்றும் ஓர் குடிசைத் தொழிலாக அதாவது சிறு வீடுகளில் சக்தி வாய்ந்த ரசாயனங்கள் குறிப்பாக சல்பர் அதாவது கந்தகம் கையாளப்படுகிறது. அதீத வெப்பம் அல்லது வீட்டில் இருக்கும் அடுப்பு தீயோ, பூஜை அறை தீயோ கூட பல விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.

மேலும் பெரிய ஆலைகளில் உரிய உரிமம் எடுக்கப்பட்டு, எல்லாவித பாதுகாப்புகள் பற்றி விபரங்கள் அறிந்தவர்கள் இருக்கும் ஆலைகள் திடீர் என கைமாறி புதியவர்களுக்கு குத்தகை விடுவதும் புதியவர்கள் விபரம் அறியாது செயல்படுவதால் பல விபத்துக்கள் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கூறும்போது விதிகளை மீறி ஒப்பந்ததாரர் மூலம் பட்டாசு ஆலை செயல்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இப்படி, ஆலையைக் குத்தகைக்கு எடுத்து பட்டாசு உற்பத்தி செய்வது சட்ட விரோதமாகும். விபத்து நடந்த பட்டாசு ஆலையை திருத்தங்கல்லைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சட்ட விரோதமாக குத்தகைக்கு எடுத்து அதிக பணியாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அனுபவம் இல்லாத தொழிலாளர்களைக் கொண்டும் முறையான பாதுகாப்பு உணகரங்கள் இல்லாமலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதால் வெடிவிபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முழுமையடையாத பட்டாசுகளை உலர் களத்தில் உலர வைக்காமல் மரத்தடியில் உலர வைத்துள்ளனர். மேலும் உற்பத்திப் பணிகள் நடக்கும் சிறிய அறையிலும் இருப்பு வைத்துள்ளனர். இதுபோன்ற விதிமீறல்களால் தான் இந்த ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே பட்டாசு ஆலைகளில் விதிமீறல் இல்லாத வகையில் அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். முறையான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வரும் காலங்களிலும் சிவகாசி பட்டாசு தயாரிப்பில் இருந்து மாறி, வேறு துறைகளில் சாதிக்க தயாராகவில்லை என்பதை உணர்ந்து இத்துறையில் உள்ள சவால்களை சீர் செய்ய தமிழக அரசு இங்குள்ள கல்வி கூடங்களில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி துறைகள் பற்றிய பாடங்கள் கட்டாயம் இருக்க வழி காண வேண்டும்.

விழிப்புணர்வுடன் மாணவர்கள் வளர்ந்தால் வரும் காலத்தில் பாதுகாப்பு உறுதியாக இருக்கும். விபத்து இல்லா சிவகாசியும் உருவாகி விடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *