செய்திகள்

தனியார் ராக்கெட்டான அக்னிபான்: வெற்றிகரமாக செலுத்தியஇஸ்ரோ

சிறீகரிகோட்டா, மே 30–

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் முதல் செமி கிரையோஜெனிக் தனியார் ராக்கெட்டான ‘அக்னிபான்’ ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சிறீகரிகோட்டாவில் உள்ள தனியார் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 7:15 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டார். சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்கோஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், 300 கிலோவுக்குக் குறைவான எடையுள்ள செயற்கைக் கோள்களை, பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சோதனை 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.

முதல் செமி கிரையோஜெனிக்

இந்த ராக்கெட் நாட்டிலேயே முதல் அரை கிரையோஜெனிக் (semi cryogenic) என்ஜின் அடிப்படையிலான ராக்கெட் ஆகும். இது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3D அச்சிடப்பட்ட இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த பேராசிரியரும், அக்னிகுல்லின் வழிகாட்டியுமான சத்ய ஆர் சக்ரவர்த்தியும், சிறீகரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதன் முதல் சோதனை ஓட்டம் மே 2 ந்தேதி நடத்தப்பட்டது. எனவே, வேறு எந்த இந்திய தனியார் நிறுவனமும் செய்யாத சாதனையை சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் செய்துள்ளது. இந்த ராக்கெட், செமி கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய விமான எரிபொருள், முக்கியமாக மண்ணெண்ணெய் மற்றும் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது என்று அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிறுவனர் மொயின் எஸ்பிஎம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ இதுவரை செமி கிரையோஜெனிக் இன்ஜினை விண்ணில் செலுத்தியதில்லை. தற்போது இஸ்ரோ 2000 kN த்ரஸ்ட் செமி கிரையோஜெனிக் இன்ஜினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *