செய்திகள்

சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை 27–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை, மே 23–

சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை 27–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் தேனியில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காரில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமின் கேட்டு சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 27–-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் தரப்புக்கு உத்தரவிட்டது.

#savukusankar #savuku #tnpolice #youtuber

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *