செய்திகள்

சபரிமலை உள்பட திருவிதாங்கூர் தேவஸ்தான கோவில்களில் அரளிப்பூ பயன்படுத்தத் தடை

திருவனந்தபுரம், மே.11-

சபரிமலை உள்பட கோவில்களில் நடத்தப்படும் பூஜை, வழிபாடுகளில் அரளிப்பூவை பயன்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிப்பாட்டை சேர்ந்த இளம்பெண் சூர்யா சுரேந்திரன் அரளிப்பூவை எதேச்சையாக தின்ற காரணத்தால் மரணம் அடைந்தார்.

அதாவது நர்சு பணிக்காக இங்கிலாந்து செல்ல நெடும்பாசேரி விமான நிலையம் வந்தடைந்த நேரத்தில் அவர் மரணம் அடைந்த சம்பவம் கேரளாவை உலுக்கி இருந்தது. இதை தொடர்ந்து அரளி செடியின் தழைகளை தின்ற பசுவும், கன்றும் இறந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் அரளி இலை மற்றும் பூ விஷத்தன்மை கொண்ட தாவரம் என்பதை மருத்துவ நிபுணர்களும் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் நந்தன்கோடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பூஜைகள், வழிபாடுகள், நிவேத்தியங்களில் இனி அரளிப்பூவை பயன்படுத்த கூடாது. அதற்கு மாற்றாக மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலை மற்றும் பூ இனங்களை பயன்படுத்த வேண்டும்.

இதற்காக கோவில் வளாகத்தில் அரளி செடி அல்லாத பூந்தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தான கோவில்களில் பூந்தோட்டம் அமைக்கும் பொறுப்பு தேவஸ்தானத்தின் உதவி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *