செய்திகள்

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜன. 18–

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்திய ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

மோடி நாளை தொடங்குகிறார்

மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜனவரி 4-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நாளை ஜனவரி 19 ந்தேதி துவக்கி வைக்கிறார்.

இப் போட்டிகளை நடத்துவது தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சரின் செயலர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, உள்துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா தொடக்க விழா நடைபெறவுள்ள சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து தொடக்க விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *