சிறுகதை

குறைந்த விலை உணவு – ராஜா செல்லமுத்து

நகரின் பிரபலமாக இருக்கும் அந்த உணவகத்தில் சாப்பிடுவதற்கு என்று ஒரு கூட்டம் கூடி நிற்பார்கள். பந்தி முடிவதற்கு முன்பே பந்திக்கு போவதற்கு காத்திருக்கும் மக்கள் ஏராளம். அந்த உணவகத்தில் சாப்பிட்டால் உடலுக்கு ஏதும் கெடுதல் வராது என்பதற்காகவே மக்கள் அங்கு கூடி நிற்பார்கள். அந்த தரத்திற்கு ஏற்ப அந்த உணவகமும் மக்களுக்கு உணவுகளை விநியோகம் செய்து கொண்டிருந்தது.

சிறிது காலத்திற்கு முன்பு ஒரு சோதனையோட்டமாக ஒரு விற்பனையை ஆரம்பித்தது. அந்த உணவகம் காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை சாப்பிட்டால் வெறும் 99 ரூபாய் என்று விலைப்பட்டியலை வெளியில் வைத்தார்கள். 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை சாப்பிட்டால் வெறும் 99 ரூபாயா ? இவ்வளவு பெரிய உணவகத்தில் அவ்வளவு குறைந்த விலைக்கு உணவு தருகிறார்களா? என்று அலைமோதியது கூட்டம். சிலரெல்லாம் காலை உணவு சாப்பிடாமலேயே நேரடியாக மதிய உணவைச் சாப்பிட்டு முடித்தார்கள். ஒரு மணிக்கு மேல் சாப்பிட்டால் அதிகமாக விற்கும் அதே உணவு ஒரு மணிக்குள் சாப்பிட்டால் விலை குறைவு என்பதற்காகவே நேரத்தோடு வந்த மக்கள் கொத்துக்கொத்தாக சாப்பிட வந்து போனார்கள்.

ஒரு நாள் இதைக் கவனித்த ஈஸ்வரன் அவன் நண்பர்களுடன் 12.30 க்கு ஓட்டலுக்குள் நுழைந்து விட்டான் .

“வணக்கம் சார்” என்று கல்லாவில் இருந்தவருக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு விட்டு, “இந்த 99 ரூபாய் சாப்பாடு? என்று கேட்பதற்குள்

” சார் இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. நீங்க சாப்பிடுங்க” என்றதும் ஈஸ்வரன் அவன் நண்பர்கள் என்று 10 ,15 பேர் அந்த உணவகத்தில் சாப்பிட்டார்கள்.

ஒருவேளை ஒரு மணிக்குள் உணவைச் சாப்பிடவில்லை என்றால் 1.10,1:20 என்று கடந்து விட்டால் அதிகமாகப் பணம் கேட்பார்களோ? என்று நினைத்த ஈஸ்வரன் அருகில் இருந்த சிப்பந்தியைக் கூப்பிட்டு

“நாங்க இப்ப 12.30 மணிக்கு மணிக்கு வந்திருக்கோம். ஒருவேளை நாங்க சாப்பிட்டு முடிக்கும் போது ஒன்னு பத்து ஒன்னு 20 இப்படி ஆயிடுச்சுன்னா சாப்பாட்டுக்கு அதிகமாக பணம் கேட்பீர்களா “

என்று ஈஸ்வரன் வெள்ளந்தியாகக் கேட்க கடகடவென சிரித்த அந்த சிப்பந்தி

“அதெல்லாம் இல்ல சார். ஒரு மணிக்குள்ள நீங்க பில் வாங்கிறணும் அப்படி வாங்கினா அந்த உணவுக்கு குறைச்ச விலை. ஒரு மணிக்கு மேல வந்தா தான் அதிகமாக பணம் கொடுக்கணுமே ஒழிய 11 மணியிலிருந்து ஒரு மணிக்குள்ள இங்க எப்ப வேணாலும் வாங்கிக்கலாம்”

என்று சொல்ல ,அதுதான் சரி என்று வந்திருந்த நண்பர்கள் எல்லாம் ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தார்கள். அதிக விலையுள்ள உணவிற்கும் குறைந்த விலையில் கொடுக்கும் உணவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே அளவு. ஒரே சுவை என்று தான் இருந்தது. ஈஸ்வரனுக்கு ஒரு உறுத்தல் ஏற்பட்டது.

எதற்காக இந்த காலை 11 மணியிலிருந்து ஒரு மணிக்குள் உணவு சாப்பிடுபவர்களுக்கு விலையைக் குறைத்து இருக்கிறார்கள். இதில் ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்டு தான் பார்ப்போம் என்று அருகில் இருந்த மேனேஜரை அழைத்தான்.

” சார் தப்பா நினைக்க மாட்டீங்களே? அது ஏன் சார் காலை 11ல் இருந்து மதியம் ஒரு மணி வரைக்கும் ஒரு விலை அதுக்கு மேல அதிகமான விலைனு வச்சிருக்கீங்க? இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?” என்று ஈஸ்வரன் கேட்டபோது ஈஸ்வனைத் தன் கண்ணாடி கண்கள் வழியாக உற்றுக் கவனித்த அந்த மேனேஜர்

“தம்பி நீங்க கேக்குறது தப்பு இல்ல. இருந்தாலும் நான் சொல்றேன். மனுஷங்க எல்லாம் இப்போ நேரத்துக்கு சாப்பிடறது இல்ல. பணம், காசு, நேரம் இல்ல இப்படின்னு அவங்களுக்கு அவங்களே சமாதானப்படுத்திக்கிட்டு மதிய உணவு சாப்பிட விடுறாங்க. காலையில எட்டு மணிக்குள்ள சாப்பிடணும். மதியம் 12:30 ல இருந்து ஒரு மணிக்குள்ள சாப்பிடணும் .இரவு எட்டு மணிக்குள்ள சாப்பிடணும் அப்படிங்கறதுதான் மருத்துவர்களும் பெரியவங்களும் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க அட்லீஸ்ட் இந்த விலை குறைப்பினால இங்கே வந்து சாப்பிடுற வங்களுடைய மனநிலையும் பழக்க வழக்கமும் சரியா வந்ததுன்னா தொடர்ந்து ஒரு மணிக்குள் எல்லாரும் சாப்பிடுவாங்க இல்ல. அவங்களுக்கு உடம்பு நல்லா இருக்கும்ல. அந்த நல்ல எண்ணத்தில் தான் எங்க முதலாளி இந்த விலை குறைப்பு உணவு கொடுக்கிறார்.இந்த உணவை கொடுக்கிறதனால எங்களுக்கு நஷ்டம் தான். ஆனா மனுஷங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும் அப்படிங்கிற ஆர்வத்துல தான் செஞ்சிருக்காரு “

என்று மேனேஜர் சொன்னபோது அதுவரை சாப்பிட்டு கொண்டு இருந்த ஈஸ்வரனும் அவன் நண்பர்களும் வாயில் வைத்த சாப்பாட்டை மெல்ல முடியாமல் விழித்தார்கள் .

“என்னடா இது? இப்படி ஒரு விஷயம் இந்த விலை குறைப்புல அடங்கி இருக்கா? ரொம்ப நல்ல மனுஷங்களா இருக்காங்களே? என்று சாப்பிட ஆரம்பித்தார்கள். ஒரு மணி கடந்து சென்றது.

” சார் சாப்பிட்டீங்களா? வேற எதுவும் வேணுமா? என்று அந்தச் சிப்பந்தி கேட்க

“இன்னும் ரெண்டு சாப்பாடு குடுங்க “என்றான் ஈஸ்வரன்

” சார் ஒரு மணி வரைக்கும் தான் விலை குறைந்த சாப்பாடு. அதுக்கு மேல விலை அதிகம் “

என்று அந்த சிப்பந்தி சொன்ன போது .

*தெரியுமுங்க எடுத்துட்டு வாங்க ” என்று ஈஸ்வரன் சொல்ல இரண்டு சாப்பாடுகளை எடுத்து வைத்து முன்னால் வைத்தான் சிப்பந்தி வந்திருந்த அத்தனை பேரும் ஆளுக்கு கொஞ்சம் பகிர்ந்து சாப்பிட்டார்கள் .

அப்போது உடனிருந்த நண்பன் ஈஸ்வரனிடம் கேட்டார்

“என்ன ஈஸ்வரா ? உனக்கு கிறுக்கு ஏதும் புடிச்சிருக்கா ? வெலை குறைஞ்ச சாப்பாட்டை நாம வாங்கி சாப்பிட்டோம். அது சரி. ஏன் மறுபடியும் விலை அதிகமான சாப்பாடு வாங்கி சாப்பிடுறோம்? என்ற போது

இந்த ஓட்டல்காரன் எவ்வளவு தூரத்துக்கு மனுஷங்களை மகிழ்ச்சி படுத்தி அவங்கள நல்ல வழி நடத்தனு ன்னு நினைக்கிறானோ? அது மாதிரி நாமளும் அந்த ஓட்டல் காரனுக்கு ஏதாவது ஒன்னு செய்யணும் இல்ல? அதுக்காகத்தான் நல்ல வெலையில இரண்டு சாப்பாடு வாங்குனேன் ” . என்று சொல்லி அந்த இரண்டு சாப்பாடு நண்பர்கள் எல்லாம் பகிர்ந்து கொண்டார்கள் .

அதிலிருந்து ஈஸ்வரன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த ஓட்டலில் ஒரு மணிக்குள் சாப்பிட ஆரம்பித்தான். ஈஸ்வரனுக்கும் அவனுடன் வந்த நண்பர்களுக்கும் சில உடல் உபாதைகள் முன்னால் இருந்தன. இப்போது சரியானது .அந்த பழக்க வழக்கம் அவர்களுக்குள் நல்ல உடல் நிலையும் மனநிலையும் வளர்த்தது.

சில மனிதர்கள் பணத்திற்காக வாழ்கிறார்கள். சில மனிதர்கள் மனிதர்களுக்காக வாழ்கிறார்கள் .அதில் இந்த ஓட்டல் காரரும் ஒருவர் ” என்று சொல்லிய ஈஸ்வரன் அன்றிலிருந்து அந்த பிரதான ஒட்டலுக்கு போகத் தவறுவதே இல்லை.

Loading

One Reply to “குறைந்த விலை உணவு – ராஜா செல்லமுத்து

  1. அருமையான கதை .ஆசிரியர் வித்தியாசமான முறையில் யோசிக்கிறார்.
    வாழ்க வாழ்க வாழ்க வளர்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *