செய்திகள்

காட்டுத் தீ: அமெரிக்க மலைக்காடுகளில் 10 நாட்களாக வழி தவறி அவதிப்பட்ட மலையேற்ற வீரர் மீட்பு

நியூயார்க், ஜூன் 27–

அமெரிக்க மலைக் காடுகளில் ஏறிய மலையேற்ற வீரர், காட்டுத் தீயால் வழி தவறி, 10 நாட்களாக அவதிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், போலீசார் மீட்டுள்ளனர்.

வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் மெக்லீஷ் . இவர் கலிபோர்னியா க்ரீக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இவரின் பொழுதுபோக்கு மலை ஏறுவது. இவர் வசிக்கும் வீட்டின் அருகில் சாண்டா குரூஸ் மலை இருப்பதால், அங்கு அடிக்கடி ஏறி வந்திருக்கிறார். இதனால் ஒவ்வொரு பாதையையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

காட்டுத் தீயால் வந்த வினை

சம்பவத்தன்று மெக்லீஷ் தலையில் தொப்பி, காலில் பூட்ஸ் மற்றும் பேண்ட் மட்டுமே அணிந்துக் கொண்டு, “மூன்று மணிநேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு மலை ஏறியுள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக ஏற்பட்ட காட்டு தீயினால் மரங்கள் கருகி… காட்டின் பாதையானது மறைந்துள்ளது.

அதனால், காட்டுக்குள் சென்ற மெக்லீஷ் திரும்பி வருவதற்கான பாதையை அறியமுடியாமல் திணறியிருக்கிறார். காடு முழுவதும் தெரிந்தவருக்கு திரும்பி வீடு செல்ல வழி தெரியவில்லை. இதனால் காட்டினிலேயே தனி ஒருவராய் தங்கி விட்டார். அங்கு கிடைத்த காட்டு பெர்ரிகளையும், நீரூற்றிலிருந்து தண்ணீரையும் குடித்து உயிர் பிழைத்து இருக்கிறார்.

10 நாட்களுக்கு பிறகு மீட்பு

இந்நிலையில் திரும்பி வருவதாக கூறி சென்ற மெக்லீஷ் சில நாட்களாகியும் வராததால் கவலைக்கொண்ட குடும்பத்தினர் போலீசிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக காவலர்களும் மெக்லீஷின் குடும்பத்தினரும் இணைந்து காட்டிற்குள் மெக்லீஷை தேடிச் சென்றுள்ளனர். அப்போது காட்டின் நடுப்பகுதியிலிருந்து “காப்பாற்றுங்கள்… என்று மெக்லீஷின் குரல் கேட்டுள்ளது. ஆனால் எங்கு இருக்கிறார் என்ற சரியான திசை தெரியாததால் அவரை தேடி சென்றவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

நீண்ட தேடுதலின் முடிவில், அதாவது கிட்டதட்ட 10 நாட்கள் கழிந்த நிலையில், சாண்டா குரூஸ் கவுண்டியில் எம்பயர் கிரேடு சலைக்கும், பிக் பேசின் நெடுஞ்சாலைக்கும் இடையே இருந்த ரெட்வுட் மரங்களுக்கு இடையே மெக்லீஷை போலீசார் கண்டு பிடித்தனர்.

அவரை பார்த்தது மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர், 10 நாட்களாக காட்டில் அவர் பட்ட துயரத்தை கேட்டுத் தெரிந்துக்கொண்டனர். தண்ணீரும் பழங்களும் அவர் உயிரை காப்பாற்றியதாக கூறியவர், “இனி என் வாழ்க்கையில் காட்டு பக்கமே செல்லமாட்டேன்” என்று கூறியதாக அங்குள்ள சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *