செய்திகள்

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள யு.ஜி.சி. அனுமதி

சென்னை, ஜூன்24-–

நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்து ஏற்கனவே பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அதற்கு அனுமதி வழங்கி, அதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளவாறு வரும் 2035-ம் ஆண்டுக்குள் நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். அதற்கேற்ப நடப்பு கல்வியாண்டு (2024-–25) முதல் ஜூலை-–ஆகஸ்டு மற்றும் ஜனவரி-–பிப்ரவரி என ஆண்டுக்கு 2 முறை உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

அதேநேரம் இந்த நடைமுறையை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பின்பற்றுவது கட்டாயமில்லை. தேவையான ஆசிரியர்கள் உள்பட போதிய உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதுதவிர ஜூலை-ஆகஸ்டு மாதம் நடைபெறும் முதல்கட்ட மாணவர் சேர்க்கையை போன்றே ஜனவரியில் 2-ம் கட்ட சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இனி இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘கியூட்’ தேர்வு உள்பட பல்வேறு நுழைவுத்தேர்வுகளின் மதிப்பெண்களும் ஓராண்டுக்கு செல்லுபடி யாகும். அந்த மதிப்பெண்ணையே 2 கட்ட மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இத்தகைய செயல்பாடுகள் மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், அவர்கள் மறுவாய்ப்பு பெறவும், பிற நாட்டு மாணவர்களை ஈர்க்கவும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படவும் வழிவகை செய்யும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *