செய்திகள்

கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டும் பணியை நிறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, மே 23–

கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டும் பணியை நிறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் 26.78 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்து சமய அறநிலைய துறை சட்ட விதிகளை பின்பற்றாமல், உரிய அதிகாரமில்லாமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 88 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதன் மூலம், ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வாடகை வருவாய் பாதிக்கப்படும் எனவும், கோவில் நிதி 28 கோடி ரூபாயை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதால், ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலாச்சார மையம் அமைக்க விரும்பினால், அதை கோவில் நிலத்தில், நிதியில் அமைக்க முடியாது எனவும், அரசு நிலத்தில், அரசு நிதியில் அமைத்தால் வரவேற்கத்தக்கது எனவும் திட்ட அனுமதி இல்லாமல் கலாச்சார மையம் கட்ட முடியாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. கலாச்சார மையம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளதால், அந்த பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும், இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், கோவிலின் நன்கொடையை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் கோர வேண்டும் எனவும் இந்த கலாச்சார மையம் மூலமாக கோவிலுக்கு வருவாய் கிடைக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்ற தலைமை வழக்கறிஞரின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர். மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு முடியும் வரை கலாச்சார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *