சிறுகதை

எதிர்காலம் பிரகாசம் – மு.வெ. சம்பத்

சரண் மற்றும் சத்யா இருவரும் அண்ணன் தம்பிகள். சரண் ஒன்பதாம் வகுப்பும் சத்யா ஏழாவது வகுப்பும் படிக்கின்றனர். வகுப்பில் தேர்வுகளில் எல்லாம் நல்ல மதிப்பெண் பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து விடுவார்கள். விடுமுறை நாட்களில் இவர்கள் தாத்தா பாட்டியைப் பார்க்க சென்று விடுவார்கள் பக்கத்து டவுனுக்கு.

இன்று சரண் தாத்தா பாட்டி இருவரும் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தார்கள். பேரன் வருவது இன்று தானே. அவர்கள் விளையாட, சாப்பிட, படிக்க.,படுக்க என அவர்களுக்கு எல்லா வசதிகளும் தயார் நிலையில் செய்து வைத்திருப்பார்கள். நீச்சல் பழக ஆசான், கிரிக்கெட் விளையாட உபகரணங்கள், அவர்களுக்கு அங்குள்ள பையன்களுடன் பழக வசதி அமைத்தல் போன்ற இன்னும் பலவற்றை ஏற்பாடு செய்து பேரன்களை திக்கு முக்காடச் செய்து விடுவார் சரண் தாத்தா.

சரண் மற்றும் சத்யா வந்த நாட்களில் இருந்து தாத்தா ஏற்பாட்டில் திக்கு முக்காடித் தான் போனார்கள். அன்று மாலை இவர்களை பக்கத்து தியேட்டரில் சினிமா அழைத்துச் சென்றார்கள். வந்த பேரன்கள் தாத்தா எங்களை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் சரண் தாத்தா அதற்கென்ன உங்கள் அப்பாவிடம் பேசலாம் என்று கூறி முற்றுப் புள்ளி வைத்தார்.

விடுமுறை நாட்கள் நகர நகர, சரண் மற்றும் சத்யா மறுபடியும் ஊருக்கு போக வேண்டுமே என கவலைப் பட்ட வேளையில் சரண் தாத்தா நாங்களும் உங்களுடன் ஊருக்கு வருகிறோம் என்றதும் இருவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். இருவருக்கு பிடித்தமானவைகள் கிடைக்கப் பெற்று மகிழ்வாகவே இருந்தனர்.

அன்று இரவு வெகு நேரம் சரண் மற்றும் சத்யா அறையில் தூங்காமல் பேசிக் கொண்டேயிருந்ததைக் கண்டு சரண் தாத்தா என்ன தூங்காமல் பேசிக் கொண்டே இருக்கிறார்களே, கேட்போமா என்று நினைத்த வேளையில் விளக்கு தனது ஒளியை மறைத்து இருட்டிற்கு வழி வகுத்தது கண்டு கண் அயர்ந்தார்.

மறு நாள் காலை சத்யா தாத்தாவிடம் வாருங்கள் கடைக்குச் செல்லாலாம், எங்களுக்கு சில பொருட்கள் தேவை என்றதும், தாத்தா வருகிறேன் என்று கூறி மூவரும் கிளம்பினார்கள்.

சத்யா வாங்கிய பொருட்களைக் கண்டதும் தாத்தா எதற்கு என்று கேட்கவில்லை. என்ன தான் நடக்கப் போகிறது என்று பார்ப்போம் என முடிவு செய்தார். எல்லாப் பொருட்களுடன் வந்தவர்களை கண்ட பாட்டி இதெல்லாம் எதற்கு என்று கேட்க ஆரம்பித்த போது தாத்தா சைகையால் தடுத்தார்.

மறு நாள் காலையில் பத்து மணிக்கு வீட்டில் மழலைப் பட்டாளம் சேர்ந்தது. சரியாக பத்தரை மணியளவில் சத்யா வந்திருந்த நண்பர்கள் கைகளில் சிறு பொருட்களைத் தந்தான். சரியாக பதினோரு மணியளவில் வாசலில் அந்த மணிச் சப்தம் கேட்டதும், தனது வீட்டின் வாசலில் அவர் வந்ததும் அவரை அழைத்து வந்து வீட்டினுள் அமர வைத்தார்கள்.

முதலில் அவர் பெயரைக் கேட்டான் சரண். அவர் மாணிக்கம் என்றார். வாழ்க மாணிக்கம், வாழ்க மாணிக்கத்தின் தொண்டு, உழைப்பாளி மாணிக்கமே வாழ்க வாழ்க என்றதும், தாத்தா வந்து மாணிக்கம் அவர்களே என்று மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். மாணிக்கமோ எல்லாம் நம்ம வீட்டுப் பிள்ளைகள் எப்படிக் கூப்பிட்டால் என்ன என்றார். நானோ தள்ளு வண்டி ஐஸ் விற்கும் வியாபாரி என்றார். உடனே சத்யா நீங்கள் விற்கும் ஐஸ் குளிர் பெட்டியில் வாங்கி சாப்பிடுவர்கள் உணர்வதோ உள்ளமெங்கும் குளிர்ச்சி, ஆனால் நீங்கள் மற்றும் படை படைக்கும் வெய்யிலில் வேர்க்க விறுவிறுக்க வியர்வை மழையில், ஒரு தற்காப்பு சாதனமும் இல்லையே உங்களிடம் என்றதும் மாணிக்கம் அசந்து நின்றார்.

சரண் மற்றும் சத்யா தாங்கள் வாங்கி வந்த பொருட்களை கொடுப்பதற்கு முன் நண்பர்கள் தாங்கள் கையில் கொடுத்ததைக் கொடுத்தார்கள் மாணிக்கத்திடம். பின் சத்யா மற்றும் சரண் அவரிடம் இரண்டு வேஷ்டிகள், இரண்டு துண்டுகள், இரண்டு சட்டைகள், இரண்டு கூலிங் கிளாஸ்கள், இரண்டு தொப்பிகள், இரண்டு கையுறைகள் மற்றும் இரண்டு காலணிகள் எனக் கொடுத்து ஒரு செட்டை அணியும்படிக் கூற, அதற்குள் மாணிக்கம் தனது ஐஸ் பெட்டியில் உள்ள ஐஸ்கிரீம்களை அங்குள்ளவர்களுக்கு தந்தார். வந்தவர்கள் அனைவரும் மீதமுள்ளவற்றையும் வாங்கினார்கள். மாணிக்கம் காலணி அளவை எப்படி தெரியுமென தாத்தா கேட்க, அவர் காலில் ஒரு நாள் நாங்கள் தவறுதலாக நீர் ஊற்றிட, பின் அந்த செருப்புத் தடையத்தை வைத்துத் தான் அளவு தெரிந்து கொண்டோம் என்றனர்.தாத்தா பேச வார்த்தையின்றி மௌனமானார்,

மாணிக்கம் புது ஆடை, தொப்பி, கூலிங்கிளாஸ், காலணி என கொடுத்த பொருட்கள் சகிதமாக வர, சத்யா மற்றும் சரண்அவரிடம் ஒரு தொகையைத் தர, வாங்க மறுத்த மாணிக்கத்தின் பையில் திணித்தார்கள்.

இன்று மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்களைக் கவுரவிக்கும் விதமாக உங்களை கவுரவித்தோம் என்று சரண் மற்றும் சத்யா கூற, மாணிக்கம் நமது இந்தியா நல்ல பிள்ளைகள் கையில் தான் உள்ளது. நிச்சயம் எதிர்காலம் பிரகாசிக்கும் என்றதும் சரண் தாத்தா நிச்சயம் அது தான் உண்மை என்றார். மனிதனை மனிதன் மதித்து காத்து வாழ்ந்தாலே நலம் என்றார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர், இனிமேல் ஒவ்வொரு மே 1 ந் தேதியும் உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படும். பிள்ளைகளுக்கு உழைப்பாளர் தினம் பற்றி கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி என் செலவில் நடைபெறும் என்று கூறி விட்டு, மாணிக்கம் கையில் 500 ரூபாய் தந்து விட்டு உழைப்பாளர்களை ஊக்குவிப்போம் என்றார். அங்கு இருந்தவர்கள் சரண் மற்றும் சத்யா போட்ட விதை சட்டென்று மரமானதே என்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *