செய்திகள்

அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி ஆகியோர் நேரில் வழங்கி ஆறுதல்

ஒசூர், அக். 8–

பட்டாசு கடை விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி ஆகியோர் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தமிழ்நாட்டின் மாநில எல்லையான ஜூஜூவாடியில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடி அருகே தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்த நிலையில், தீபாவளியையொட்டி மேலும் 2 கடைகளை அருகிலே திறந்து உள்ளது.

இந்தக் கடையில் அரூர், கள்ளக்குறிச்சி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் வேலை செய்து வந்து உள்ளனர்.

இந்நிலையில், கண்டெய்னர் லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, தீ மளமளவென பரவத் தொடங்கிய நிலையில், வாகனத்தில் ஏற்றிச் சென்ற அனைத்து பட்டாசுகளும் தீக்கு இரையானது.

பின்னர், இது குறித்து அத்திப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரமாக போராடி தீயை அணைக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் நவீன் ரெட்டி அவரது தந்தை ராமசாமி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்டாலின் இரங்கல்

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினை கேட்டு துயரமடைந்தேன்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இச்சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய அமைச்சர்கள் சக்கரபாணி, மா.சுப்பிரமணியன் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியில் இருந்து வழங்கிட உத்தவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று பாரவையிட்டார். அதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

வெடித்த விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்கள் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அங்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த, பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலைகளையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இதனையடுத்து பெங்களூர் சென்ட் ஜான்ஸ் மருத்துவமனை மற்றும் விக்டோரியா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 3 நபர்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறினார்கள்

அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, எம்.எல்.ஏ.கள் பிரகாஷ், ராமச்சந்திரன், சம்பத்குமார், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், சார் ஆட்சியர் ஆர்.சரண்யா, இணை இயக்குனர் பரமசிவம், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சோகம்

அத்திப்பள்ளி பட்டாசுகடை விபத்தில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நபர்கள் காயத்துடன் உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு வேடப்பன் (21 ) இவர் ஒருவர் மட்டுமே திருமணமானவர், ஆதிகேசவன்(18), சச்சின் என்கின்ற முனிவேல் ( 20), இளம்பருதி (19), விஜயராகவன் (19),ஆகாஷ் (18) கிரி (18). ஒரே கிராமத்தினைச் சேர்ந்த 7 பேர் விபத்தில் இறந்ததால் கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்த அனைவரும் கல்லூரி மற்றும் பள்ளி பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பீமாராவ் (20), லோகேஷ்(21) சிறிய அளவில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *