செய்திகள்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய பிரதமர் மோடி கண்டனம்

புதுடெல்லி, மே 16–

ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ தலைநகர் பிரஸ்டில்லா நகரின் வடகிழக்கே ஹேண்ட்லோவா என்ற இடத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் வீடு திரும்பினார். அப்போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மர்ம நபர் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். இதில் ராபர்ட் பிகோவின் வயிற்றில் 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே பிரதமரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பிரதமர் ராபர்ட் பிகோ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, அந்நாட்டு மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் இன்று காலை பகிர்ந்த பதிவில் கூறியிருப்பதாவது:–

ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி கொண்டேன். இத்தகைய கோழைத்தனமான, கொடூரமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், பிரதமர் பிகோ விரைவில் குணம் பெற வாழ்த்துகிறேன். இத்தருணத்தில் ஸ்லோவாகியா குடியரசு மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.ஸ்லோவாகியாவின் பிரதமராக கடந்த செப்டம்பரில் ராபர்ட் பிகோ மீண்டும் பொறுப்பேற்றார். அவர் மீண்டும் ஆட்சியமைத்த சில மாதங்கள் அவரின் ஆட்சி பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. குறிப்பாக உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்தியது, அரசு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ ஒளிபரப்பை நிறுத்தியது என அவரது அரசின் முடிவுகள் சர்ச்சைகளை சந்தித்தது. இந்நிலையில் அவர் மீது நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *