செய்திகள்

வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும் பிரியாணி – ரூ.200, டீ – ரூ.15, ஒரு செட் இட்லி ரூ.45

தேர்தல் ஆணையத்தின் விலை பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச்.21-–

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், பிரியாணி விலையை ரூ.200 என்றும், ஒரு டீ விலை ரூ.15 என்றும் நிர்ணயம் செய்து, அதையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.95 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை சென்னை மாநகராட்சி நிர்ணயித்துள்ளது.

அந்த வகையில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பாக பயன்படுத்தும் பொருள்களின் அதிகபட்ச விலை விவரங்கள் அடங்கிய பட்டியலை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஒரு நாள் பந்தல் அமைப்பதற்கு ரூ.1,500 முதல் ரூ.3,500 வரையிலும், சுவரொட்டிகளுக்கு (ஆயிரம் எண்ணிக்கை) ரூ.6,500 முதல் 12,500 வரையிலும், சால்வை ஒன்றுக்கு ரூ.150, குதிரையை வாடகைக்கு எடுத்தால் 4 மணி நேரத்திற்கு ரூ.6 ஆயிரம், பட்டாசு ரூ.600, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஏற்பாடு செய்தால் 3 மணி நேரத்திற்கு ரூ.10,000 என்று கணக்கில் கொள்ளலாம்.

மேடை முன்பு தோரண அலங்காரம் அமைப்பதற்கு ஒரு மீட்டருக்கு ரூ.310, வாழை மரம் ஒன்றுக்கு ரூ.700 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இசைக்குழு வாடகைக்கு 4 மணி நேரத்திற்கு ரூ.4,500, பலூன் அலங்காரம் அமைக்க ஒரு பலூனுக்கு ரூ.6 செலவு செய்யலாம். ஒரு கிலோ பிளீச்சிங் பவுடர் ரூ.90, பூசணிக்காய் ஒன்றுக்கு ரூ.120, தொப்பி ஒன்றுக்கு ரூ.50, பூ மாலை பெரியது ரூ.400, சிறியது ரூ.250, பேப்பர் மாஸ்க் ரூ.3, ஒரு சேர் வாடகை – ரூ.8, சிறிய பூங்கொத்துக்கு ரூ.150, சிறிய அளவிலான துண்டுக்கு ரூ.84, பெரிய அளவிலான துண்டுக்கு ரூ.305, ஆப்பிள் மாலை (ஒவ்வொரு ஆப்பிளுக்கும் ரூ.35), தேங்காய் ஒன்றுக்கு ரூ.30, எழுமிச்சை பழம் ஒன்றுக்கு ரூ.5 செலவு செய்யலாம்.

மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சிக்கன் பிரியாணிக்கு ரூ.150, வெஜ் பிரியாணிக்கு ரூ.100, முட்டை பிரியாணி –- ரூ.60, மஸ்ரூம் பிரியாணி –- ரூ.70ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 இட்லி ரூ.45

2 இட்லி (சட்னி, சாம்பாருடன்) -ரூ.45ம், வடை -– ரூ.25ம், பொங்கல்– -ரூ.60ம் சமோசா – – ரூ.20ம், பப்ஸ் – – ரூ.20ம், எக் பப்ஸ் -– ரூ.25ம் செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பால் ரூ.20, சாப்பாடு ரூ.100, டீ ரூ.15, காபி ரூ.20, தண்ணீர் கேன் ஒன்று ரூ.35 (20 லிட்டர்), தண்ணீர் பாட்டில் ரூ.20 (ஒரு லிட்டர்), நீர் மோர் ரூ.20, குளிர்பானம் ரூ.15 செலவு செய்யலாம். மேலும், 5 நட்சத்திர விடுதிகளில் குளிர்சாதன அறையில் தங்குவதற்கு ரூ.19,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனம் வாடகைக்கு எடுக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ரூ.1,150, அதிகபட்சமாக ரூ.8,500 (டிரைவர் வாடகை, எரிபொருள் உள்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *