செய்திகள்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜூலை 3–

பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி தீர்ப்பளித்தது. 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழந்தார்.

தண்டனை ரத்து

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில், காவல் துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை எனவும், பலவீனமான ஆதாரங்களே உள்ளதாகவும், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை எனவும் கூறி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் பதவியை பறித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *