சினிமா செய்திகள்

மறக்க முடியாத படம் ராமராஜனுக்கு; மறுக்க முடியாத பாடம் மக்களுக்கு!

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை : பத்திரிகை செய்திகளின் பின்னணியில் ராகேஷின் திரைக்கதை

நாக்கைப் பிடுங்குகிற மாதிரி எழுப்பும் கேள்விகள்: க்ளைமாக்சில் தியேட்டரே அமைதி!


மறக்க முடியாத படம் – மக்கள் நாயகன் ராமராஜனுக்கு! மறுக்க முடியாத பாடம் – ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும்!

12 வார்த்தைகளில் வாழ்த்துரை எழுதி விடலாம், ஆர்.ராகேஷின் ‘சாமானியன்’ திரைப்படத்துக்கு, எடுத்த எடுப்பில்!

‘வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்று சொல்வதைப் போல நம்ம ஊரு நாயகன் ராமராஜன், மீண்டும் 13 வருடங்களுக்குப் பிறகு நடித்து திரைக்கு வரும் படம் (வாழ்த்துகள்)

இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜாவின் வழக்கமான ‘சென்டிமெண்ட்’ பாட்டோடு திரைக்கு வரும் படம் (மீண்டும் ஒரு முறை வாழ்த்து)

என்று இரண்டு பெருமையைப் பதிவு செய்யும் விதத்தில் ‘சாமானியன்’ திரைப்படத்தை ஃபிலிம் இன்ஸ்டூட் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற மாணவன் ஆர்.ராகேஷும், எட்செட்ரா நிறுவனத்தின் அதிபர் வி.மதியழகனும் திரையில் ஓட விட்டிருக்கிறார்கள்.

(ஒரு சிறு திருத்தம் : நீ….ண்….ட இடைவெளிக்குப் பின் உடல் சற்று பெருத்த நிலையில் – (2010ம் ஆண்டு சாலை விபத்துக்குப் பின் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும்) மக்கள் நாயகன் ராமராஜனை நடக்க விட்டிருக்கிறார்கள்.)

வங்கி அலுவலகத்துக்குள் ராமராஜன், வங்கி ஊழியரின் வீட்டுக்குள் ராதாரவி, வங்கிக் கடன் வசூலிக்கும் ஏஜெண்டின் வீட்டுக்குள் எம்எஸ் பாஸ்கர் நுழைகிறார்கள். துப்பாக்கி முனையில் எதிரில் இருப்பவர்களை மிரட்டுகிறார்கள். ராமராஜன் வைக்கும் 3 கோரிக்கைகளுக்கு அடிபணிய வைக்கிறார்கள்.

வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டும் ராமராஜனின் உருவத்தைப் பார்த்து… ‘ஆங்… இவரா…. சங்கரநாராயணன், இவர் எப்பேர்ப்பட்ட ராணுவ அதிகாரி தெரியுமா…?’ என்று மறுமுனையில் இருந்து சரவண சுப்பையா கேள்வி எழுப்ப, போலீஸ் அதிகாரி கேஎஸ் ரவிகுமாரும் – அதிரடி மீட்புப்படையும் அதிர்ச்சியில் உறைய ‘இன்டர்வெல் பிளாக்’!

எதிர்பாராத சஸ்பென்சோடு இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் ராகேஷ். சபாஷ்!

கிராபிக்சில் ராணுவ உடையில் இளைஞன் ராமராஜன், அதற்கடுத்த காட்சிகளில் அன்பு மகள் – மருமகன் பாசக் கதை ஃபிளாஷ்பேக்.

எழுத்து – இயக்கம் : ராகேஷ்.

க்ளைமாக்ஸ் காட்சி வசனங்கள் :

1) ‘‘இந்த உலகத்துல நல்லவன்,கெட்டவன், ஏழை,பணக்காரன், மேல் ஜாதி, கீழ் ஜாதினு ஒரு புண்ணாக்குனு எதுவும் இல்ல. இங்க இரண்டே ஜாதி தான் ஒருத்தன் பணம் கொடுக்கறவன் இன்னொருத்தன் பணம் வாங்கறவன்னு இந்த ரெண்டு பேருக்கு நடுவுல தான் உலகமே சுத்துது’’

2) ‘‘பத்துலட்சம் கடன் வாங்கினவன் வட்டியோட பதினைந்து லட்சமா திருப்பி கட்டறது சாமானியனோட நேர்மை அத பேங்க்காரங்க அவங்க படத்தை பேங்க்ல மாட்டி பாராட்டலைனாலும் பரவால்ல அவங்கள அசிங்கப்படுத்தாதீங்க’’.

3) கோடி கோடியா கடன் வாங்கின பணக்காரங்களுக்கு வாரா கடன்ற பேருல தள்ளுபடி பண்ணிட்டு அஞ்சி பத்துனு கட்ட முடியாத சாமானியங்களை ஏன்டா அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தறீங்க –

4) சாமானியங்களை கடன் வாங்குங்க வேண்டாம்னு சொல்லுல ஆனா உங்க தகுதிக்கு மீறி கடன் வாங்காதீங்கன்னு தான் சொல்றேன். ஏன்னா அதுவே உங்களுக்கு ஆபத்தாவும் முடியலாம்.

5) என் பொண்ணுகிட்ட பேராசை படாதான்னு தான் சொல்லி வளர்த்தேன் ஆசையே படக்கூடாதுனு எப்படி சொல்ல முடியும்? குருவிக்கு கூடு இருக்கு, பாம்புக்கு புத்து இருக்கு சொந்தமா வீடு வாங்கனும்தான ஆசைப்பட்டா? – சாட்டை அடி சுளீர் சுளீர், கன்னத்தில் அறையும் பளார் – பளார் அறை ரகம்.

தெருக் கோடியில் இருக்கும் பெட்டிக் கடைக்காரன் கூட ‘கடன் அன்பை முறிக்கும்’ என்று எழுதி வைக்கிறான். லட்சம் லட்சமா … ஏன் … கோடிக் கோடியா பணம் குடுக்கிற வங்கிலே ‘கடன் – உயிரை முறிக்கும்’னு ஏன் எழுதி வைக்க மாட்டேங்கறான்?!

கண்கள் கலங்க, உள்ளம் பதற – உதடுகள் துடிக்க ராமராஜன் கோபாவேசமாய் வெளிக்கொட்டும் வார்த்தைகளில் தான்… எத்தனை சூடு…?

அரங்கே அதிரும் அந்தக் கைத்தட்டேலே போதும், ராகேஷ் – ராமராஜன் – மதியழகன் கூட்டணி சிந்தியிருக்கும் வியர்வைக்கு.

காமிரா முன் நிற்கும் கலைஞர்கள் – அலட்டிக் கொள்ளாத, யதார்த்த நடிப்பில்

மதுரை மரிக்கொழுந்து வாசம் – நம்ம ஊரு போலாகுமா – மாங்குயிலே, பூங்குயிலே – (பின்னணி இசை) செண்பகமே … செண்பகமே – இளையராஜாவின் பாட்டில் ரெண்டு ரெண்டு வரிகளை காட்சிகளில் ஓடவிட்டிருப்பதில் ராகேஷின் புத்திசாலித் தனம் தெரிகிறது.‘கடன் தொல்லை : விஷம் குடித்து கணவன் – மனைவி – குழந்தை : குடும்பமே தற்கொலை’

வேதனை தரும் சேதியைப் பத்திரிகைகளில் இந்த நிமிடம் வரைக்கும் படித்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா? இந்த 10 வார்த்தை செய்தி தான் ‘சாமானியன்’ படத்தின் மையக் கரு.

கனவு இல்லத்துக்கு ஆசைப்பட்டு வங்கியில் கடன் வாங்கும் (லியோ சிவகுமார்–நக்ஷா சரண்) இளம் தம்பதி. வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல், சோதனை மேல் சோதனைக்குத் தள்ளப்படும் அவலம். வங்கியின் வசூல் ஊழியர்கள் (முல்லை…) ‘சித்ரவதை’ கட்டிட காண்ட்ராக்டரின் (மைம்கோபி) கையாட்கள் அடுத்தடுத்து சித்ரவதை – தாங்க முடியாமல் விரக்தியின் விளிம்புக்கேத் தள்ளப்படும் கொடுமை. முடிவில் ‘இனி கொடுப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவுமில்லை…’ என்று கைப்படக் கடிதம் எழுதி விட்டு, வங்கி அலுவலகத்துக்குள்ளேயே மனைவி குழந்தையோடு தற்கொலை செய்து கொள்ளும் விபரீதம்.

குடும்பத்தோடு தன் மகளின் (வளர்ப்பு மகள் – அது ஒரு தனி ஃபிளாஷ்பேக்) தற்கொலைக்குக் காரணமானவர்கள் யார் யார் என்பது தெரிய வந்ததும், கதையின் நாயகன் ராமராஜன், பால்ய சிநேகிதன் எம்ஆர்ஆர் ராதாரவி, சம்பந்தி எம்எஸ் பாஸ்கர் இருவரோடு சேர்ந்து கொண்டு சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரி (போஸ் வெங்கட்), வசூல் ஏஜெண்டு (முல்லை), ரியல் எஸ்டேட் பிசினஸ் கட்டிட நிறுவன அதிபர் (மைம்கோபி) ஆகியோரை எப்படி பழி தீர்க்கிறார் என்பதே கதை.

சோதனைகளைத் கடந்து ‘சாமானியனை’ கண்ணில் காட்டியிருக்கும் மூவர் : வி.மதியழகன், பாலசுப்பிரமணியன், சதீஷ்குமார் – பட அதிபர்கள்.

கதை : வி.கார்த்திக்குமார். பாடல்கள் : இளையராஜா, குரல்கள் : இளையராஜா, கார்த்திக் ஷர்ரேத், ஒளிப்பதிவு : அருட்செல்வன், படத்தொகுப்பு : ராம் கோபி.

1) போஸ்டரில் இருக்கும் ராமராஜன் – ராதாரவி – எம்எஸ் பாஸ்கர் கைகளில் ரிவால்வர் இருக்கும். டுமீல்… டுமீல்… டுமீல்… ரத்தம் தெறிக்கவில்லை திரையில். வரவேற்கலாம்.

2) ‘விரலுக்குத் தகுந்த வீக்கம் தான் வேண்டும்’ என்று புத்தி சொல்லி இருக்கிறார்கள், பாராட்டலாம்.

3) வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கிவிட்டு பிராணாவஸ்தை படுவதை படம் பிடித்திருக்கிறார்கள் ரசிக்கலாம்.

4) பில்டர்களின் தேனூறும் பேச்சில் சிலந்தி வலையில் சிக்கும் சிறு பூச்சிகளாய் சிக்கிய நடுத்தர வர்க்கத்தைக் காட்டியிருப்பதில் கைதட்டலாம்.

கதாநாயகனாகவே 50 படங்களை நிறைவு செய்யும் சாதனைக்குத் துடித்த மக்கள் நாயகனின் 45வது படம். (அரை சதம் அடிப்பதில் வேகத் தடை)

ராமராஜன் கலை வாழ்க்கையில்

மறக்க முடியாத படம் ;

ஒவ்வொரு சாமான்யனின்

நிஜ வாழ்க்கையிலும்

மறுக்க முடியாத பாடம்;

ஃபிலிம் இன்ஸ்டிடூட்

ராகேஷ் நினைவில் நிற்கிறார்!

-வீ. ராம்ஜீ


#ilayaraja #ramarajan #radharavi #bank-loan #real-estate #suicides #senbagamae #ramjee #cinema #tamilcinema #kollywood


You might also watch:


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *