சிறுகதை

பழமையே புதுமை – தருமபுரி சி.சுரேஷ்

முனுசாமி தன் வழுக்கைத் தலையில் கையை வைத்துக் கொண்டு நாகராஜைப் பார்த்துக் கூறினான் : “நம்ம முப்பாட்டன் காலத்துல செஞ்சதெல்லாம் இந்த காலத்து பசங்களுக்கு சொன்னா அவங்க சிரிக்கிறாங்க. இப்ப பாரு கொரோனா வைரஸுக்கு பயந்து வெளியே எங்க போயிட்டு வந்தாலும் உடனே வீட்டுக்கு வெளியே மஞ்சத்தண்ணியில கையக் கால கழுவிட்டு வீட்டுக்குள்ள நுழையறான்ங்க.

என் பையன் ரகுவுக்கு எத்தனை தடவை நான் சொல்லி இருப்பேன்,

டேய் வெளிய போயிட்டு வந்த கை கால் முகம் கழுவிட்டு வீட்டுக்குள்ள வாடான்னு.

அவன் காதுலையே போட்டுக்க மாட்டான். ஆனா இப்ப அப்படி இல்லை “

நாகராஜன் தன் பங்குக்கு

“ஆமாம் முனுசாமி இந்த காலத்து பசங்க பெரிய அறிவுஜீவிகள் என்று அவங்களுக்குள்ள நினைப்பு ;பெரியவங்க எது சொன்னாலும் அதில் ஒரு உள் அர்த்தம் இருக்கும் அப்படின்னு இந்த காலத்து பசங்க யோசிக்கிறது இல்லை”

“ஆமா இப்ப நாகரீகம் என்ற பெயரில் நம்ம கலாச்சாரம், பண்பாடு, நம்முடைய பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் விட்டுட்டு கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிட்டு இருக்குங்க”

“ஆமா என் பையனை பார்த்து முடியை ஒட்ட வெட்டுடா அப்படின்னு சொன்னா நான் என்ன கோமாளியா”னு என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்

“அப்ப பெரியவங்க எல்லாம் கோமாளி என்று நினைத்து விட்டார்களா?”

“அப்படித்தான் நினைக்கிறாங்க

பலருக்கு படிச்சு திமிரு; நீ என்ன எனக்கு புத்தி சொல்றது அப்படின்ற மிதப்பு”

“ஆமா நீ சொல்றது கரெக்டுதான். அறிவுதான் இறுமாப்பு உண்டாகுது; அன்புதான் பக்தி விருத்தி உண்டாக்கும். இது எப்ப தான் புரிஞ்சுக்குதுங்களோ”

“எங்க கேக்குதுங்க எதை சொன்னாலும் அலட்சியப்படுத்துறாங்க”

ரகு இப்பொழுது ஊரை சுற்றுவதில்லை; வீட்டில் அடங்கிக் கிடந்தான்.

வீட்டைச் சுற்றி அம்மா வைத்திருந்த வாழை மரங்களில் குலை தள்ளும் படியாக இருந்த மரங்களை தாங்கிப் பிடிக்க இரண்டு மரக் கம்புகளை குறுக்கும் நெடுக்குமாக இணைத்து கையிற்றில் அந்த மரத்தின் கழுத்துப்பகுதியை இறுக கட்டி

குலை சாய்ந்தந்த மரத்தை தாங்கிப்பிடிக்க செய்தான்.

ரவி யோசித்தான் அம்மாவுக்கு இந்த வாழைமரங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் ஏனெனில் வாழையடி வாழை என பெரியோர்களால் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன மரம்

வாழை மரம் வெட்ட வெட்ட பக்கமாய் துளிர்த்துக் கொண்டே இருக்கும் தன் சந்ததியை வளர்த்துக் கொண்டே இருக்கும்.

ஒருவேளை அந்த அர்த்தத்தில்தான் கல்யாண வீடுகளில் நுழைவு வாசல்களில் வாழை மரங்களை கட்டுவார்கள் போலத் தெரிகிறது என மனதிற்குள் பேசிக் கொண்டான்.

ஒவ்வொரு மரத்தையும் நம் மூதாதையர்கள் அர்த்தப்படுத்திதான் வாழ்ந்திருக்கிறார்கள் நமக்கும் கற்பித்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் இந்த நாட்களில் அவன் அதிகமாய் சிந்திக்க ஆரம்பித்தான்

இப்பொழுதெல்லாம் ரகு அப்பாவிடம் எதிர்த்துப் பேசுவதில்லை.

வெளியே சென்று வந்தால் உடனே கால், கைகளை அப்பா சொல்லாமலே தண்ணீரால் தூய்மையாக்கி கொள்கிறான்.

பரட்டைத் தலையை ஒட்ட வெட்டி ஒழுங்காய் தினமும் எண்ணெய் தேய்க்கிறான்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி என்னும் பழமொழியில் எவ்வளவு சுத்த பத்தம் இருக்கிறது . நோய்க்கிருமியை அண்டாதபடி வாழவேண்டும் என்று அன்றைக்கு மூதாதையர்கள் எவ்வளவு அழகாய் தெளிவாய் சொல்லி இருக்கிறார்கள் என்பதை அவன் யோசித்து ஆச்சரியப்பட்டான்.

முனுசாமிக்கு தன் மகனுடைய அன்றாடச் செயல்களை பார்க்கும் பொழுது சந்தோசமாகவும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது

எத்தனை நாள் என் மகனுக்கு நான் சொல்லியிருப்பேன். ஒரு நாளும் அவன் காது கொடுத்து கேட்க மாட்டான்.

இப்ப நான் எதுவுமே சொல்வதில்லை; பேசாத வைரஸ்சுக்கு எவ்வளவாய் பயப்படுகிறான். கீழ்ப்படிகிறான் அடியாத மாடு படியாது என்று சொல்வார்களே. அந்தப் பழமொழி எவ்வளவு நிசம்.

வீட்டுக்கு வெளியே வராண்டாவில் அம்மா சாணம் தெளித்து கூட்டிக் கோலம் போடுவதை அநேக தடவைகளில் கேலி செய்திருக்கிறான்.

இப்பொழுதோ அதன் அர்த்தத்தை அறிந்து அமைதியாகிவிட்டான்.

அம்மா அவனுக்கு தெளிவாய் சொன்னாள் “கண்ணா இது கிருமிநாசினி இந்த சாணத்தை நம்ம வீட்டு வராண்டாவில் தெளிக்கும்போது நம்ம வீட்டுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது. எந்த கிருமிகளும் நம்மள அண்ட முடியாது”

சரிம்மா கோலப்பொடி வச்சு கோலம் போடுறீங்களே அதுக்கு என்ன அர்த்தம்

“அதுவா அது வந்து நம்ம அரிசிப் பொடியில கோலம் போடும்போது சிற்றுயிர்களான எறும்புகளுக்கு அது உணவாகவும் வீட்டிற்கு வெளியே வீதியில் நடப்பவர்களையும் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் சந்தோசப்படுத்த கூடியதாய் அந்த கோலங்கள் அமைகிறது”

“அப்படியா அம்மா இதெல்லாம் உனக்கு எப்படிமா தெரியும்”

“எங்க பாட்டி எனக்கு சொன்னதுதான்”

அப்படியா

“ஆமாப்பா அப்பல்லாம் யூடியூப் கிடையாது; டிவி சேனல் கிடையாது ;அம்மா நிலாவை காட்டி தான் சோறு ஊட்டுவாள்; கூடவே கதை சொல்லுவாள்; பாட்டு பாடுவாள்; இன்னைக்கு அப்படியா மொபைல்போன் இல்லாமல் எந்த குழந்தையும் சோறு தின்ன மாட்டேங்குது; அடங்க மாட்டேங்குது”

“ஆமாமா காலம் மாறிடுச்சு”

“காலம் மாறல நாமதான் மாறிட்டோம்”

“அப்பல்லாம் சின்னவங்க பெரியவங்களை மதிப்பாங்க. இப்ப எல்லாம் மிதிக்கிறாங்க. யாருப்பா வயசுக்கு மதிப்பு கொடுக்கிறாங்க”

“அம்மா உங்க கோபம் எனக்கு புரியுது. இனிமே நான் உங்களுக்கு நல்ல பிள்ளையா நடந்துக்குவேன்”

“மூத்தோர் சொல் கசக்கும் பின்பு இனிக்கும் நெல்லிக்காய் போல”

“உண்மைதான் அம்மா நல்ல வாழ்க்கை வாழ அறிவு மட்டும் போதாது ; அன்பும் வேணும்”

“ஆமாப்பா இந்த கொரோனா வைரஸ் வர்றதுக்கு முன்னாடி நீ காலில் சக்கரம் கட்டுன மாதிரி ஒரு நிமிஷம் கூட வீட்டில் இருக்க மாட்ட . உன் கூட நான் பேசக் கூட

முடியாது; எப்பவும் உங்க சினேகப் பட்டாளத்தோடையே இருப்ப”

“ஆமாம்மா இப்போ உங்களோட நான் செலவிடுகிற ஒவ்வொரு நிமிடமும் எனக்கு எவ்வளவு பிரயோசனமா இருக்குது . எவ்வளவு நல்ல காரியங்களை நான் தெரிஞ்சுக்கிறேன். ரொம்ப நன்றிம்மா”

“இதுக்கெல்லாம் எதுக்குடா நன்றி. நீ என் புள்ளை; நான் சொல்ல வேண்டியது என் கடமை “

தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் ஆயிற்று

தூங்கி விழித்த அவன் அப்பாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது:

“பங்கஜம் மத்தியான சாப்பாடு எல்லாம் ஆச்சாடி”

“எல்லா ரெடியா இருக்கு. நீங்க வந்தா சரி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம்”

அம்மா அழகாய் உணவு பரிமாறினாள். கூட்டுப் பொரியல் ரசம் மோர் அப்பளம் என அசத்தலாய் இருந்தது.

தினமும் தவறாமல் நெல்லிக்காய் ஊறுகாயை வற்புறுத்தி சாப்பிட வைப்பாள்.

“ஏம்மா நெல்லிக்காய் ஊறுகாயை தினம் வற்புறுத்தி சாப்பிட வைக்கிற” என்று கேட்டான்.

“கண்ணா எங்க பாட்டி சொல்லுவாங்க. நாம சாப்பிடற சாப்பாட்டுல ஆறுசுவை உடம்புக்குள்ள போனா உடம்பு ஆரோக்கியமாக இருக்குமாம். நெல்லிக்காயில் ஆறுசுவை இருக்குது; அதனால அதை தினமும் சாப்பிட்டால் நல்லதுப்பா”

அம்மாவை கண்கொட்டாமல் ஆச்சரியத்தோடு பார்த்தேன். எட்டாம் கிளாஸ் படித்த பங்கஜத்துக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? இனி யாரையும் சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது.

“டேய் கண்ணா சாப்பிடுடா”

“ஹாங் அம்மா”சுயநினைவுக்கு மீண்டான்.

ரகு மேலும் யோசித்தான் இந்த கொரோனா வைரஸை அழிக்கும் படியாக மருந்து சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டால் உலகம் காப்பாற்றப்பட்டு விடும்.

இந்நாட்களில் கற்ற நற்பண்புகளும் நல்ல செயல்களும் சுகாதார செயல்முறைகளும் யாவரும் தொடர்ந்து கடைப் பிடித்தால் வருங்கால சந்ததிகளுக்கும் இவைகளை பயிற்றுவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

சாப்பிட்டு முடித்தவுடன் தன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாய் தன் மாற்றங்களையும் கற்ற பாடங்களையும் அனுப்பி வைத்தான்.

அவர்களும் விழிப்புணர்வு பெற்றார்கள் வியந்து போய் பலருக்கும் அனுப்பினார்கள்

வீடுகள்தோறும் ஓல்ட் இஸ் கோல்ட் புரட்டப்படாத சித்த வைத்திய நூல்கள்– புரட்ட ஆரம்பித்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *