செய்திகள்

பணியாளர்களை துன்புறுத்திய ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 1/2 ஆண்டு சிறை

வீட்டு நாய்க்கு மாதம் ரூ.70 ஆயிரம்; 18 மணி நேரம் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ரூ.19,000 சம்பளம்

சுவீஸ், ஜூன் 22–

வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்தியதாக தொழிலதிபர்கள் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு 4 1/2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து சுவிட்சர்லந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொழிலாளர்களின் போர்ட்டைப் பறிமுதல் செய்ததாகவும், அவர்களுக்கு சுவிஸ் பிராங்குகளில் அல்லாமல் ரூபாயில் ஊதியம் கொடுத்ததாகவும், வில்லாவை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் தொழிலாளர்களை துன்புறுத்தியதற்காகவும், அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பை வழங்கியதற்காகவும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாய்க்கு ரூ.8 லட்சம், மனிதருக்கு ரூ.660

குறிப்பிட்ட பணியாளர்களின் வேலைக்கு சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதும், குறைந்த சுகாதார நலன்களை வழங்கியதும் விசாரணையின் முடிவில் உறுதியாகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாதத்தின் போது, அவர்கள் வீட்டு நாய்க்கு ஆண்டிற்கு 8 லட்ச ரூபாயை, அதாவது மாதத்திற்கு ரூ.70 ஆயிரத்தை ஹிந்துஜா குடும்பத்தினர் செலவு செய்வதாகவும், ஆனால் பணியாளர்களிடம் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை வாங்கிக்கொண்டு நாளொன்றுக்கு வெறும் 660 ரூபாயை மட்டுமே, அதாவது மாதத்துக்கு ரூ.19 ஆயிரம் ஊதியமாக வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதன் முடிவில் குற்றவாளிகளை “சுயநலவாதிகள்” என்று நீதிமன்றம் சாடியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பணியாளர்களுடன் ஹிந்துஜா குடும்பம் சமரசம் செய்துகொண்டாலும், தொழிலாளர் நலன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் ஹிந்துஜா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோரருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த தண்டனையை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹிந்துஜா குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஜா சாம்ராஜ்ஜியம்

ஹிந்துஜா குழுமம் 1914 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிந்தி குடும்பத்தைச் சேர்ந்த பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவால் நிறுவப்பட்டது. குழுமத் தலைவர் ஸ்ரீசந்த் ஹிந்துஜா மற்றும் அவரது சகோதரர் கோபிசந்த் , 1979 இல் ஏற்றுமதி வணிகத்தை மேம்படுத்துவதற்காக லண்டனில் குடியேறினர். இங்கிலாந்தின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக ஹிந்துஜா உள்ளது. 38 நாடுகளில் வணிகங்களை நடத்து, ஹிந்துஜாக்களின் சொத்து மதிப்பு சுமார் 47 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *