செய்திகள்

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? : ஆய்வு முடிவு

சென்னை, மே 18–

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? எந்த அளவு சாப்பிடலாம் என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்து நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் பெரியாண்டவர் கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். எனவே மாம்பழத்தை உண்ணும்போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் பலர் கருதுகின்றனர்.

மாம்பழங்கள் பல்வேறு விதமான உடல்நல பயன்களை நமக்கு அளித்தாலும் ஒரு சிலர் அவற்றை உணவில் சேர்க்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு மாம்பழத் தூண்டு சாப்பிடலாமா என்பது போன்ற சந்தேகங்கள் பலரிடையே இருக்கிறது.

மாம்பழங்கள் வைட்டமின் A, B, காம்ப்ளக்ஸ், C மற்றும் பாலிபீனால்களின் சிறந்த மூலமாக திகழ்கின்றன. 51 என்ற மிதமான கிளைசிமிக் எண் கொண்ட மாம்பழங்களை கட்டுப்படுத்தப்பட்ட நீரிழிவு நோய் கொண்ட நபர்கள் மிதமான அளவே சாப்பிடலாம்.

‘மாம்பழமும் நீரிழிவு நோயும்..’

இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ‘மாம்பழமும் – நீரிழிவு நோயும்..’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். இந்த ஆய்வறிக்கைப்படி, “நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்கின்றனர். ஒரு நாளைக்கு ஒருவர் 100-150 கிராம் அளவு மாம்பழம் சாப்பிடலாம் அல்லது ஒரு நாளைக்கு 3 முறை 50 கிராம் மாம்பழம் சாப்பிடலாம்.

பொதுவாக ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவு, உணவுக்குப் பிறகு உயர்கிறது. உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும். எனவே உணவு சாப்பிட்ட உடனே மாம்பழம் சாப்பிட வேண்டாம். சிற்றுண்டிகள் சாப்பிடும் வேளையில், மாம்பழங்களை சிற்றுண்டியாக உண்ணலாம்.

மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீட்டை மேலும் குறைக்க நார்ச்சத்து நிறைந்த பிற உணவுகளுடன் மாம்பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுமாறு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது மாம்பழத்தை, பீன்ஸ் மற்றும் தானியங்களுடன் சேர்த்து கலவையாக (salad) சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான வேகம் குறையும். மெதுவான செரிமானம் நமக்கு முழு உணவை உட்கொண்ட உணர்வை கொடுக்கும். மேலும், நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாது.

மாம்பழ சாறு வேண்டாம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தைச் சாப்பிடும்போது கலோரி அளவு மற்றும் கிளைசெமிக் அளவை மனதில் கொள்ளுங்கள். ஜூஸ் வடிவில் சாப்பிடும்போது 2 அல்லது 3 பழங்கள் மற்றும் சர்க்கரையும் சேர்க்கப்படும் அபாயம் இருக்கிறது.

பழங்களில் உள்ள சர்க்கரையைப் பற்றி யாரும் பயப்பட வேண்டாம். ஏனெனில் இவை இயற்கையான சர்க்கரைகள், குக்கீஸ் மற்றும் கேக் மற்றும் அந்த வகை உணவுகளில் உள்ள சர்க்கரையை விட ஆபத்தானது இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மாம்பழத் துண்டோடு உங்களால் நிறுத்த முடியுமா? : டாக்டர் பெரியாண்டவர் கேள்வி

இந்த துறையில் தனித்துவமாக 25 ஆண்டுகள் அனுபவமுள்ள சென்னையைச் சேர்ந்த முன்னணி நீரிழிவு நிபுணர் டாக்டர் ஐ. பெரியாண்டவர் http://www.drperiyandavar.com/ தரும் எச்சரிக்கை என்னவெனில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டிய உடல்நிலை உங்களுக்கு இருந்தால்…, ‘நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்து எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் என்கிறார். நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு மாம்பழத் தூண்டு சாப்பிடலாம். ஆனால் அத்தோடு நிறுத்திக் கொள்ள முடியுமா? என கேட்கிறார்.

சுவையான மாம்பழங்கள் என்றால் சுட்டிக்குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றே சொல்ல வேண்டும். மாம்பழங்கள் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 21.79 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் விளைகின்றன. ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், பிகார், கர்நாடகா, குஜராத் மற்றும் தெலங்கானா ஆகியவை மாம்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய வீடியோ:

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *