செய்திகள்

நரேந்திர மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் கடும் வெறுப்பு: தேஜஸ்வி யாதவ் பேச்சு

பாட்னா, ஏப். 29–

பிரதமர் மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:–

‘பீகார் மற்றும் நாட்டின் பல இடங்களில் 2 கட்ட வாக்குப்பதிவு சதவீதம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், ‘பாஜக மன உளைச்சலில் இருக்கிறது. பீகாரில் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்னைகள் குறித்து நாங்கள் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் எங்கள் உண்மையான பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மக்கள் இப்போது மோடி மற்றும் பாஜகவின் பொய்களால் வெறுப்படைந்துள்ளனர். 10 ஆண்டுகள் கொடுத்தும், எந்த வேலையும் செய்யப்படவில்லை. நாட்டின் வளர்ச்சி, பீகாரின் வளர்ச்சி பற்றி பேசும் எதையும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்தத் தேர்தலில் உள்ளூர் பிரச்னைகளே ஆதிக்கம் செலுத்தும்’ என்று தெரிவித்தார்.

மோடியின் தரம்தாழ்ந்த பேச்சு

‘முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கள் உங்களுக்கு பின்னடைவாக மாறக்கூடுமா? என்ற கேள்விக்கு, ‘மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். எனவே வேலையின்மை, வறுமை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்னைகளால் இந்துக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மந்திர் – மசூதி மற்றும் இஸ்லாம் – சனாதனி என்று, இவ்வளவு தரம் தாழ்ந்த பேச்சுக்களை பிரதமர் மோடி பேசுவார் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. 10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தேன்? புதிய பார்வை என்ன? எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறேன் ? என்பது குறித்து ஒரு பிரதமர் பேச வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

‘சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த சலசலப்பு குறைந்துள்ளதா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், ‘சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சமூக மற்றும் பொருளாதார நீதி கொள்கை திட்டங்களுக்கு உதவுவதற்கான நீண்ட கால நடவடிக்கை இது. சாதிவாரி கணக்கெடுப்பு எங்களுக்கு ஒரு தேர்தல் பிரச்னை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இது அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும்’ என்று தேஜஸ்வி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *